This Article is From Jan 30, 2020

சிஏஏவுக்கு எதிராக பேச்சு: மும்பையில் மருத்துவர் கஃபீல் கான் நள்ளிரவில் திடீர் கைது!

கடந்த மாதம் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் மருத்துவர் கஃபீல் கான் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

உத்தர பிரதேச சிறப்பு காவல்துறை குழு கபீல் கானை மும்பையில் கைது செய்தது.

Mumbai/Lucknow:

உத்தர பிரதேச அரசு மருத்துவமனையில் 60 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிறையில் இருந்த மருத்துவர் கஃபில் கானை நேற்றிரவு உத்தர பிரதேச சிறப்பு போலீசார் குழு மும்பையில் கைது செய்துள்ளது. 

கடந்த மாதம் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் மருத்துவர் கஃபீல் கான் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. 

டிசம்பர் மாதத்திலே கஃபீல் கான் மீது முதல்கட்ட தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதாகவும் அதன் அடிப்படையிலே தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக மருத்துவர் கஃபீல் கான் மும்பை வருகை தந்த போது அவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

சட்டப்பிரிவு 153Aவின் கீழ் (இரு பிரிவினரிடையே வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக) சிவில் லைன் காவல்நிலையத்தில் பதியப்பட்ட வழக்கின் அடிப்படையில் உத்தர பிரதேச சிறப்பு போலீசார் குழு மருத்துவர் கஃபீல் கானை கைது செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மருத்துவர் கஃபீல் கான் மீதான அந்த வழக்கானது டிச.13ம் தேதியன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு பின்னர், அலிகார் பல்கலைக்கழகத்தில் பெரும் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தது. பல்கலைக்கழகத்தில் நுழைந்த காவல்துறையினர் மாணவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அலிகார் பல்கலைக்கழக மாணவர்கள் வளாகத்திற்கு வெளியே பேரணி செல்ல முயன்ற போது அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்தே அந்த பெரும் வன்முறை நிகழ்ந்தது. 

எனினும், உத்தர பிரதேச சிறப்பு போலீசார் குழு வழக்கு பதிவு செய்யப்பட்டு 40 நாட்கள் கழித்து தற்போது மருத்துவர் கஃபீல் கானை கைது செய்வதற்கான காரணம் எதுவும் தெளிவாக தெரியவில்லை. 

இன்றைய தினம் மருத்துவர் கஃபீல் கான் மும்பையில் நடைபெறும் சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்ள இருந்தார். உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தன. இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவர் கஃபீல் கான் கைது செய்யப்பட்டு, 9 மாதங்களுக்குப் பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 

தொடர்ந்து, கடந்த வருடம் செப்டம்பர் மாதம் கஃபீல் கான் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவரை விடுவித்து உ.பி அரசு அறிக்கை வெளியிட்டது. 

(With inputs from PTI)

.