This Article is From Jul 17, 2019

உடல்நிலை கவலைக்கிடம்: ’சரவணபவன்’ ராஜகோபால் தனியார் மருத்துவமனைக்கு மாற்றம்!

ஸ்டான்லி மருத்துவமனையில் சிறை கைதிகளுக்கான வார்டில் ராஜகோபால் அனுமதிப்பட்டார். உடல்நிலை மோசமானதால் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டு, மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

உடல்நிலை கவலைக்கிடம்: ’சரவணபவன்’ ராஜகோபால் தனியார் மருத்துவமனைக்கு மாற்றம்!

’சரவணபவன்’ ராஜகோபால் தனியார் மருத்துவமனைக்கு மாற்றம்.


சாந்தக்குமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட "சரவண பவன்" ஓட்டல் நிறுவனர் ராஜகோபாலின் உடல் கவலைக்கிடமாக உள்ள நிலையில் அவர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு, பிரின்ஸ் சாந்தக்குமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் விதித்த இந்த ஆயுள் தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டும், தீர்ப்பில் எந்த மாற்றமும் இல்லாமல் ஆயுள் தண்டன உறுதி செய்யப்பட்டது. 

தொடர்ந்து, உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து கடந்த 9-ம் தேதி நீதிபதியின் முன் ராஜகோபால் ஆஜராகினார். உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால் தனியார் மருத்துவமனையில் இருந்து நீதிமன்றத்திற்கு ஆம்புலன்ஸ் மூலமாகதான் ராஜகோபால் கொண்டுவரப்பட்டார். நீதிபதி அவரைப் புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். ஆனால் சிறைக்கு செல்லும் போதே அவருடைய உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டது.

அதனால், ஸ்டான்லி மருத்துவமனையில் சிறை கைதிகளுக்கான வார்டில் ராஜகோபால் அனுமதிப்பட்டார். உடல்நிலை மோசமானதால் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டு, மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

எனினும், ஸ்டான்லி மருத்துவமனையில், போதிய வசதிகள் இல்லையென்று கூறி அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும் என ராஜகோபாலின் மகன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதனை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் ராஜகோபாலை தனியார் மருத்துவமனையில் சேர்க்க அனுமதி அளித்தனர். 

இதைத்தொடர்ந்து ராஜகோபாலின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக மாறியுள்ளது எனவும், அவருக்கு ரத்த அழுத்தம் குறைவாக இருப்பதால் ரத்த அழுத்தம் சீராகும் வரை ஸ்டான்லி மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கப்படும் என ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இன்று ராஜகோபால் தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
 

.