7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சிவகங்கை, புதுக்கோட்டை, நாகை மற்றும் திருவாரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அத்துடன் வங்கக் கடலில் தமிழக கடலோரப்பகுதியை ஒட்டி காற்றழுத்தம் நிலை கொண்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளது.
இந்நிலையில், வெப்ப சலனம் காரணமாக வளி மண்டல மேல் அடுக்கில் ஏற்பட்டுள்ள காற்று சுழற்சியால் தமிழகத்தை ஒட்டிய பகுதியில் காற்றழுத்தம் உருவாகியுள்ளது. இதனால் தமிழகம் புதுச்சேரியில் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்று காலை முதல் தீவிரமடைந்து கனமழையாக பெய்து வருகிறது. இதனையடுத்து சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி்களுக்கு விடுமுறை அறிவித்து அந்ததந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
சென்னையில் மயிலாப்பூர், மந்தைவெளி, பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி நகர், மெரினா உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. ஆலந்தூர், கிண்டி, கோட்டூர்புரம், நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு உள்ளிட்ட இடங்களில் இரவு முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.
முன்னதாக, தமிழகத்தில் மழை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூலில் கூறியதாவது, வரும் 30ம் தேதி மற்றும் டிசம்பர் 1, 2ம் தேதிகளில் தமிழகத்தில் வச்சி செய்யப் போகும் மழை காத்திருக்கிறது.
நமக்கு வில்லனான வறண்ட காற்று தமிழகக் கடற்கரை மாவட்டங்களில் மிக விரைவில் தாக்க உள்ளது. ஆனால் அதற்குள் தமிழகத்தின் கடற்கரையோர மாவட்டங்கள் குறிப்பாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில், ஒருநாளாவது இரவு தொடங்கி காலை வரை கனமழை பெய்யும் வாய்ப்பு நிச்சயம் கிடைத்துவிடும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.