அடுத்த இரு நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனிடையே, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும், தொடர்ந்து இரண்டு நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இதைத்தவிர கடலூர், செங்கல்பட்டு, ராமநாதபுரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், புதுச்சேரியில் இன்று அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தொடர் மழை காரணமாக சென்னை பல்கலையில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது. கனமழை காரணமாக நாளை நடை பெற இருந்த அண்ணா பல்கலை தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகள் மற்றும் 4 வளாகங்களில் நடக்க இருந்த தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.