தொடர் மழை காரணமாக 7 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தாண்டு இயல்பை காட்டிலும் கூடுதலாக மழை பொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன், கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதேபோல், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மன்னார் வளைகுடா, லட்சத்தீவுகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கையை ஒட்டியுள்ள கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்பதால் இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் தொடர் மழை காரணமாக 7 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, புதுக்கோட்டை, திருவாரூர், பெரம்பலூர், ராமநாதபுரம், சிவகங்கை, அரியலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர், சிதம்பரம், வடலூர் கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.