ஷூட்டிங் நடந்த இடத்தில் நிறைய முட்கள் இருந்தன - ரஜினிகாந்த்
மேன் வெர்சஸ் வைல்ட்' நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் காயமடைந்ததாக வந்த தகவலை அடுத்து சென்னை திரும்பிய ரஜினி அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
டிஸ்கவரி சேனலின் பிரபல நிகழ்ச்சியான 'மேன் வெர்சஸ் வைல்ட்-டை' பியர் கிரில்ஸ் தொகுத்து வழங்குகிறார். அடர்ந்த வனப்பகுதியில் ஆபத்தான சூழ்நிலைகளில் எவ்வாறு உயிர் பிழைத்திருப்பது, அங்கிருந்து எப்படி தப்பி வருவது குறித்த நிகழ்ச்சி அது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, பிரதமர் மோடி உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பியர் கிரில்ஸுடன் ஏற்கெனவே நடித்துள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் ரஜினியை வைத்து, கிரில்ஸ் நிகழ்ச்சியை தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியானது. இதற்காக கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள பந்திபுரா புலிகள் காப்பகத்தில் நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நடந்தது.
இந்நிலையில் ரஜினிக்கு ஷூட்டிங்கில் காயம் ஏற்பட்டதாகத் தகவல் வெளியானது. தொடர்ந்து, 2 நாட்கள் நடந்த படப்படிப்பை முடித்து கொண்டு நடிகர் ரஜினிகாந்த் நேற்றிரவு சென்னை திரும்பினார்.
இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “ 'மேன் வெர்சஸ் வைல்ட்' ஷூட்டிங் மைசூர் அருகேயுள்ள பந்திப்பூரில் நடந்தது. அதை முடித்துவிட்டு வருகிறேன்.
அதில் எனக்கு அடிபட்டுவிட்டது என்று சொன்னார்கள். அதெல்லாம் ஒன்றுமில்லை. ஷூட்டிங் நடந்த இடத்தில் நிறைய முட்கள் இருந்தன. அதில் சில முட்கள் குத்தின. அவ்வளவுதான்” என்றார்.
கடந்த ஆண்டு மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியை பிரதமர் மோடியை வைத்து கிரில்ஸ் நடத்தினார். இந்த நிகழ்ச்சியின்போது தனது இளமைக்காலம், தேநீர் விற்றது, இளைஞனாக இருந்தபோது இமயமலைக்கு தனியாக சென்றது உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி சுவாரசியமாக பேசியிருந்தார்.
இதுகுறித்து பேட்டியளித்திருந்த கிரில்ஸ், 'பிரதமர் மோடியுடன் நிகழ்ச்சி நடத்தியதை நான் கவுரவமாக கருதுகிறேன். இந்தியாவின் வனப்பகுதிக்கும், அழகுக்கும் நான் ஒரு ரசிகன். நிலப்பரப்பு மட்டுமல்லாமல் இங்குள்ள மக்களையும் எனக்கு பிடிக்கும். இந்தாண்டு இன்னும் பல நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக நாங்கள் இந்தியா வருகிறோம்' என்று கூறியிருந்தார்.