This Article is From Apr 02, 2019

‘தீக்குளிக்க வேண்டாம்,டீ குடிச்சிட்டு வேலையைப் பாருங்க!’- தொண்டர்களுக்கு துரைமுருகன்

முன்னதாக கடந்த சனிக்கிழமை, காட்பாடியில் இருக்கும் துரைமுருகன் வீட்டில் வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்தினர்.

‘தீக்குளிக்க வேண்டாம்,டீ குடிச்சிட்டு வேலையைப் பாருங்க!’- தொண்டர்களுக்கு துரைமுருகன்

திமுக தொண்டர், ‘தலைவா, நீங்க கண் அசைங்க தலைவா, நான் தீக்குளிக்கிறேன். உங்க உத்தரவுக்காகத்தான் காத்திருக்கேன்’ என்றார்.

வேலூரில் உள்ள சிமென்ட் குடோன் ஒன்றில் நேற்று வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் 11.53 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் பறிமுதல் செய்யப்பட்டது. திமுக பிரமுகர் ஒருவருக்குச் சொந்தமான இடத்தில் இந்த ரெய்டு நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த, இந்த முறை வேலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கில் பணப் பட்டுவாடா செய்ய குடோனில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. 

முன்னதாக கடந்த சனிக்கிழமை, காட்பாடியில் இருக்கும் துரைமுருகன் வீட்டில் வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்தினர். அந்த ரெய்டின் போது, 10.50 லட்ச ரூபாய் மதிப்பிலான கணக்கில் வராத பணத்தை ஐடி துறையினர் கைப்பற்றியிருக்கக் கூடும் எனப்படுகிறது. கதிர் ஆனந்துக்குச் சொந்தமான கல்லூரியிலும் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தொடர்ந்து துரைமுருகன் மற்றும் அவரது மகனுக்குச் சொந்தமான இடங்களிலும், நெருக்கமானவர்களின் இடங்களிலும் ரெய்டு நடத்தி வரப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. இதையடுத்து காட்பாடியில் இருக்கும் துரைமுருகன் வீட்டுக்கு அதிக திமுக தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். அவருக்கு ஆறுதல் சொல்லும் நோக்கில் திமுக உள்ளூர் நிர்வாகிகளும் துரைமுருகன் வீட்டில் முகாமிட்டுள்ளனர். 

நேற்று மாலை அவர்களைச் சந்திக்க வீட்டிலிருந்து வெளியே வந்தார் துரைமுருகன். அப்போது ஒரு திமுக தொண்டர், ‘தலைவா, நீங்க கண் அசைங்க தலைவா, நான் தீக்குளிக்கிறேன். உங்க உத்தரவுக்காகத்தான் காத்திருக்கேன்' என்றார். அருகிலிருந்த பல தொண்டர்கள் இதைக் கேட்டு ஆர்ப்பரித்தனர்.

எதற்கும் அலட்டிக் கொள்ளாத துரை முருகன், ‘தீக்குளிக்க வேண்டாம், டீ குடித்துவிட்டு போய் தேர்தல் வேலையைப் பாருங்கள்' என்று ஆறுதல் கூறி அனுப்பினார். 

.