This Article is From Aug 10, 2019

“எந்த வெற்றியும் சாதாரணமானது கிடையாது!”- விமர்சனங்களுக்கு துரைமுருகன் பளீச்

“தேர்தலைப் பொறுத்தவரை எந்தவொரு வெற்றியையும் சாதரணமாக பார்க்க முடியாது."

Advertisement
தமிழ்நாடு Written by

“சிறுபான்மையினர்களான கிறித்துவர்கள், முஸ்லிம்களின் வாக்குகள் எப்போதும் திமுக-வுக்கு அதிகமாகவே கிடைக்கும். இந்த முறையும் அது நிரூபணமாகியுள்ளது”- துரை முருகன்

நடந்து முடிந்த வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் கதிர் ஆனந்த், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை விட சுமார் 8,000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றியடைந்துள்ளார். திமுக-வுக்கு ஆதரவான சூழல் இருந்தபோதும், நூலிழையிலேயே வெற்றி கிடைத்துள்ளதும், அதிமுக-வின் வாக்கு வங்கியில் பெரிய சேதாரம் இல்லை என்பதும் இந்தத் தேர்தல் முடிவுகள் மூலம் பேசு பொருளாக மாறியுள்ளது. திமுக வெற்றி குறித்து பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அக்கட்சியின் பொருளாளாரும் கதிர் ஆனந்தின் தந்தையுமான துரை முருகன், மனம் திறந்து பேசியுள்ளார். 

இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த துரை முருகன், “தேர்தலைப் பொறுத்தவரை எந்தவொரு வெற்றியையும் சாதரணமாக பார்க்க முடியாது. அதைப் போலத்தான் இந்த வெற்றியும் சாதரணமானது கிடையாது. இந்த வெற்றி ஒரு விஷயத்தைத்தான் உணர்த்துகிறது. தளபதி ஸ்டாலின் மீது தமிழக மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை இதன் மூலம் மீண்டும் உறுதியாகியுள்ளது” என்று கூறினார். 

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியின் பல வட்டங்களில் அதிமுக-வின் ஏ.சி.சண்முகத்துக்குத்தான் அதிக வாக்குகள் கிடைத்தன. ஆனால் சிறுபான்மையினர்கள் அதிகம் இருக்கும் வாணியம்பாடி வட்டத்தில், திமுக-வுக்கு சுமார் 22,000 வாக்குகள் அதிகம் கிடைத்ததாக சொல்லப்படுகிறது. இந்த வாக்குகள்தான் திமுக, வெற்றி பெறவும் உறுதுணையாக இருந்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து பேசிய துரை முருகன், “சிறுபான்மையினர்களான கிறித்துவர்கள், முஸ்லிம்களின் வாக்குகள் எப்போதும் திமுக-வுக்கு அதிகமாகவே கிடைக்கும். இந்த முறையும் அது நிரூபணமாகியுள்ளது” என்று தெரிவித்தார். 

Advertisement

இன்னும் 2 ஆண்டுகளில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கெனவே நடந்த 22 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத் தேர்தலில் கணிசமான இடங்களில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. இப்போது, வேலூர் தொகுதியிலும் அதிமுக, வெற்றிக்குப் பக்கத்தில் வந்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது. அடுத்தடுத்து வரும் இடைத் தேர்தல்களிலும் இதே நிலை தொடருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

Advertisement