"ரஜினி, சொன்னது அவரின் கருத்து. அது குறித்து நாம் எதவும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை"
எனக்கும், திருவள்ளுவருக்கும் (Thiruvalluvar) காவி சாயம் பூச முயல்கிறார்கள். ஆனால், நாங்கள் சிக்கமாட்டோம் என நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth), திடீரென்று செய்தியாளர்களை சந்தித்துப் பரபரப்பாக பேட்டி கொடுத்துள்ளார். தமிழக அரசியல் வட்டாரத்தில் ரஜினியின் கருத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டி என்று சொன்ன ரஜினி, பாஜக-வின் முன்முகமாகவும் பின்முகமாகவும் இருக்கப் போவதில்லை என்பதை இன்றைய பேட்டியின் மூலம் சூசகமாக தெரிவித்துள்ளார். ரஜினி (Rajini), பற்ற வைத்த நெருப்பு, பல இடங்களில் புகைய ஆரம்பத்திருக்கிறது.
தமிழக எதிர்க்கட்சியான திமுக-வின் பொருளாளர், துரைமுருகன் (Durai Murugan), ரஜினியின் பேட்டியைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் அது குறித்து கேட்கபட்டபோது, “நீண்ட படப்பிடிப்புகளில் இருப்பதனால், ரஜினிக்கு தமிழக அரசியல் சூழ்நிலை பற்றி தெரிந்திருக்கவில்லை. அவர் தமிழகத்தில் வெற்றிடம் இருப்பதாக சொல்கிறார். ஆனால், களத்தில் வந்து பார்த்தால், அந்த வெற்றிடத்தை தளபதி ஸ்டாலின் நிரப்பிவிட்டார் என்று தெரியும்,” என்றார்.
‘காவி சாயம் பூச முடியாது' என்று ரஜினி கூறியுள்ளது பற்றி துரைமுருகன், “அவருக்கு முதலில் யார் காவி சாயம் பூசினார்கள் என்றும் தெரியாது. இப்போது அவர் யாருக்கு பதில் அளிக்கிறார் என்றும் தெரியாது. ரஜினி, சொன்னது அவரின் கருத்து. அது குறித்து நாம் எதவும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை,” என்றார் அதிரடியாக.
தொடர்ந்து, ‘ரஜினியின் இன்றைய அறிவிப்பால், வரும் சட்டமன்றத் தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவுமா' எனக் கேட்டதற்கு, “ரஜினி கட்சியை ஆரம்பிக்க உள்ளேன் என்றுதான் தெரிவித்துள்ளார். இன்னும் அதையே ஆரம்பிக்கவில்லை. முதலில் அதைச் செய்யட்டும். அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்,” என்றார் தீர்க்கமாக.