நேற்று 40 கிலோ மீட்டர் வேகத்தில் டெல்லியில் மணல் புயல் வீசியது
ஹைலைட்ஸ்
- டெல்லிக்கு மணல் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- டெல்லியைச் சுற்றியுள்ள மாநிலங்களையும் இந்த புயல் பாதிக்கக்கூடும்
- காலையில் மேகம் தெளிவாக இருக்கும், மாலை புயல் வீசும் என்று கூறப்படுகிறது
New Delhi: டெல்லியில் இன்று மணல் புயல் வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய வானிலையும் டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் இருக்கும் மாநிலங்களில் நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இன்று காலை டெல்லியில் நல்ல வெளிச்சமும், தெளிவான வானமுமாக சூழல் இருந்தது. இந்நிலையில், மாலை மணல் புயல் வீசும் என்று கூறியுள்ளது சற்று முரணாகத் தெரிந்தது.
ஆனால் வானிலை ஆய்வு மையம், `காலை மேகம் மிகத் தெளிவாகத் தான் இருக்கிறது. ஆனால், மாலை அப்படியிருக்க வாய்ப்பில்லை. இன்று மதியம் மற்றும் மாலை இடி மற்றும் மின்னல் அடிக்கக் கூடும். மேலும், மணல் புயலும் வீச வாய்ப்புள்ளது' என்று தெரிவித்துள்ளது.
டெல்லி மட்டுமின்றி, பக்கத்தில் இருக்கும் மாநிலங்களான ஹரியானா, உத்தரகாண்ட், சண்டிகர் போன்றவையும் இந்த மணல் புயலால் பாதிக்கப்படும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
நேற்று மாலை டெல்லி, நொய்டா, காஸியாபாத் ஆகிய பகுதிகளில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் மணல் புயல் வீசியது. இந்தப் புயல் தொடர்ந்து வறண்டிருந்த வானிலையால் அவதிப்பட்ட மக்களுக்கு ஒரு மாற்றாக இருந்தது.
நேற்று டெல்லியில் அதிகபட்ச வெப்பநிலை 42 டிகிரியாக இருந்தது. இது இந்த சீசனில் இருக்கும் சராசரியை விட அதிகம். அதேபோல குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரியாக பதிவு செய்யப்பட்டது. இதுவும் வழக்கத்தை விட மூன்று டிகிரி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.