This Article is From Oct 15, 2018

முதல்வருக்கு எதிரான சிபிஐ விசாரணை; ‘சர்ச்சை கருத்து’ குறித்து பொன்னையன் விளக்கம்!

அதிமுக-வின் மூத்த தலைவர்களுள் ஒருவரான பொன்னையன், ‘எதிர்கட்சிகளின் சதியால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

முதல்வருக்கு எதிரான சிபிஐ விசாரணை; ‘சர்ச்சை கருத்து’ குறித்து பொன்னையன் விளக்கம்!

தமிழகத்தில் நெடுஞ்சாலைகள் போடுவதற்கான டெண்டர் ஒதுக்கிய விவகாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கூறி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அதிமுக-வின் மூத்த தலைவர்களுள் ஒருவரான பொன்னையன், ‘எதிர்கட்சிகளின் சதியால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யும்’ என்று சர்ச்சைக்குரிய வகையில் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து திமுக, ‘பொன்னையனின் கருத்து கண்டிக்கத்தக்கது. முதல்வர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு எதிராக அரசு எப்படி மேல் முறையீடு செய்ய முடியும். அப்படியென்றால் லஞ்ச ஒழிப்புத் துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா?’ என்று காட்டமாக கேள்வி எழுப்பியது.

திமுக-வின் இந்த தாக்குதலுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பொன்னையன், ‘என் கருத்தை சிலர் தவறாக புரிந்து கொண்டனர். நான் அரசு, அதாவது லஞ்ச ஒழிப்புத் துறை மேல் முறையீடு செய்யலாம் என்று தான் கூறினேன். செய்யும் என்று கூறவில்லை. இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறை என்பது ஒரு சுதந்திர அமைப்பு. அதை முதல்வரோ, அரசோ, கட்சியோ கட்டுப்படுத்த முடியாது’ என்று விளக்கம் அளித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நெடுஞ்சாலை திட்டங்கள் தொடர்பான ஒப்பந்தங்களை, தனது நெருங்கிய உறவினர்களுக்கு அளித்ததாக சில மாதங்களுக்கு முன்னர் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக திமுக தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரித்து வந்தனர். வழக்கு விசாரணையின்போது, லஞ்ச ஒழிப்பத்துறை இயக்குனர் சார்பாக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜரானார். அப்போது, நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஒதுக்கப்பட்டதில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனை மறுத்த நீதிபதி, முதல்வர் கட்டுப்பாட்டில்தானே நெடுஞ்சாலைத் துறையும், லஞ்ச ஒழிப்புத்துறையும் உள்ளது என்று கேள்வி எழுப்பினர். தொடர்ந்து நீதிமன்றம், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் அதிருப்தி தெரிவித்து, வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது.

முதல்வருக்கு எதிரான வழக்கு குறித்த ஆவணங்கள் அனைத்தையும், ஒரு வாரத்திற்குள் சிபிஐ அதிகாரிகளிடம் ஊழல் தடுப்பு பிரிவு ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோன்று, வழக்கு விசாரணையை 3 மாதத்திற்குள் நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டதோடு, முகாந்திரம் ஏதும் இருப்பின் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்து விசாரிக்கவும் சிபிஐ-க்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.