This Article is From Jul 30, 2018

கருணாநிதி நலமாக உள்ளார்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

மருத்துவமனை முன் கூட வேண்டாம் என திமுக தலைவர்கள் கூறிய பின்பும் தொடர்ந்து காவேரி மருத்துவமனை முன் தொண்டர்கள் குவிந்துள்ளனர்

முதல்வர் பழனிசாமியும் துணைமுதல்வர் பன்னீர்செல்வமும் தமிழ் மக்களின் உண்மையான தலைவர் என கருணாநிதியைப் புகழ்ந்தனர்

Chennai:

முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இன்று காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தி.மு.க தலைவர் கருணாநிதியை பார்த்தனர். அவரை தமிழர்களின் தலைவர் எனவும் புகழ்ந்தனர். முன்னதாக, தி.மு.க தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டால், தமிழக அரசின் சார்பில் மருத்துவ உதவிகள் செய்ய தயாராக உள்ளோம் எனவும் தமிழக முதல்வர் தெரிவித்திருந்தார்.

'கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது. அவரது குடும்பத்தினரையும் சந்தித்தேன்' என காவேரி மருத்துவமனையின் முன் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.

நேற்றிரவு கருணாநிதி உடல்நிலையில் சிறிது நேரத்துக்குப் பின்னடைவு ஏற்பட்டதாகவும் தற்போது அவர் உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் மருத்துவமனையின் சார்பாக நேற்று பின்னிரவு அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

தி.மு.க செயல் தலைவரும், கருணாநிதியின் மகனுமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களை கலைந்து செல்லுமாறு கூறினாலும் அவர்கள் தொடர்ந்து மருத்துவமனை முன்னே குவிந்துள்ளனர். அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க, நூற்றுக்கணக்கான போலீஸார் காவேரி மருத்துவமனை முன்னர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

சிறுநீரகப் பாதையில் தொற்று ஏற்பட்டதால் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை நேற்று துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் நேற்று நேரில் சந்தித்திருந்தார். அப்போது கருணாநிதி அவர்கள் ஒருக்களித்து படுத்திருக்கும் புகைப்படமும் வெளியிடப்பட்டது.

முன்னதாக, திரிணமூல் காங்கிரசு எம்.பி டெரக் ஓ பிரைனும் மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோரைச் சந்தித்தார். பதினைந்தாண்டுகளுக்கு முன்பே தி.மு.கவில் இணையவேண்டும் என கருணாநிதி அவர்களால் அழைப்பு விடுக்கப்பட்ட நடிகர் கமல்ஹாசனும் கருணாநிதியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்திருந்தார்.

கடந்த ஜூலை 18-ம் தேதி டிராக்கியாஸ்டமி குழாய் மாற்றுவதற்காக ஐந்து முறை தமிழக முதல்வரான தி.மு.க தலைவர் கருணாநிதி அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து
அவரின் சிறுநீரகப் பாதையில் ஏற்பட்ட தொற்று மற்றும் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று தேறி வருகிறார். கடந்த ஓராண்டுக்கும் மேலாக எந்தப் பொது நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொள்ளவில்லை. அவ்வப்போது தி.மு.க தலைமையகமான அண்ணா அறிவாலயத்துக்கு மட்டுமே வந்து சென்றார்.

.