This Article is From Aug 14, 2020

ஆகஸ்ட் 17 முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ்; முதல்வர் அறிவிப்பு!

தமிழ்நாடு முழுவதும் பயணிக்க  (மாவட்டங்களுக்கு இடையே) 17.8.2020 முதல்   ஆதார் அல்லது குடும்ப அட்டை விவரங்களுடன் தொலைபேசி / அலைபேசி எண்ணுடன் விண்ணப்பித்தால், e-Pass அனுமதி எவ்வித தாமதமும் தடையுமின்றி உடனுக்குடன், விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்க உத்தரவிட்டப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 17 முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ்; முதல்வர் அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 3.20 லட்சத்தினை கடந்துள்ள நிலையில், தொடர்ச்சியாக நாளொன்றுக்கு 5 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் புதியதாக கண்டறியப்படுகின்றனர்.

இந்நிலையில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் நடைமுறையை தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், இதில் பல முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் வந்த வண்ணமிருந்தன. எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் ஆகஸ்ட் 17 முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி தற்போது அறிவித்துள்ளார்.  இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழக அரசு கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தும், சிகிச்சைகளை அளித்தும், நிவாரணங்களை வழங்கியும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.  நோய்த் தொற்றின் போக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பொது மக்களின் ஒத்துழைப்பையும், நோய்த் தொற்றின் நிலையையும் கருத்தில் கொண்டு,  ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது.

நோய்த் தொற்று பரவுவதை தடுக்க, திருமணம், அவசர மருத்துவம், நெருங்கிய உறவினர் மரணம், பணி சம்பந்தமாக பயணித்தல், வெளியிடங்களுக்குச் சென்று சொந்த ஊர் திரும்புதல் ஆகிய காரணங்களுக்காக மட்டும் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க விண்ணப்பிக்கப்படும் e-Pass விண்ணப்பங்களுக்கு  அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.  இதன் மூலம் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள் கண்காணிக்கப்பட்டு, நோய்த் தொற்று ஏற்பட்டால் அவர்களுடன் தொடர்புடையவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில், பொதுமக்கள் முக்கிய பணிகளுக்கு தடையின்றி தமிழ்நாடு முழுவதும் பயணிக்க  (மாவட்டங்களுக்கு இடையே) 17.8.2020 முதல்   ஆதார் அல்லது குடும்ப அட்டை விவரங்களுடன் தொலைபேசி / அலைபேசி எண்ணுடன் விண்ணப்பித்தால், e-Pass அனுமதி எவ்வித தாமதமும் தடையுமின்றி உடனுக்குடன், விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்க உத்தரவிட்டப்பட்டுள்ளது.

பொதுமக்களின் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை, அனைவரும் பொறுப்புடன் பயன்படுத்தி தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும், தவிர்க்க இயலாத பணிகளுக்கு மட்டும் e-Pass க்கு விண்ணப்பம் செய்து, e-Pass பெற்று பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த அரசின் நிலையான வழிகாட்டி நடைமுறைகளை கடைபிடிக்கவும், அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் பொதுமக்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

.