This Article is From Jun 27, 2020

கொரோனாவால் இறந்தவரின் உடலை ஜேசிபியில் மயானத்திற்கு எடுத்துச்சென்ற அவலம்!

இந்த விவகாரம் வெளியில் தெரிய வந்ததுடன், இரண்டு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இறந்தவரின் உடலை ஜேசிபியில் மயானத்திற்கு எடுத்துச்சென்ற அவலம்!

Hyderabad:

ஆந்திராவில் கொரோனா வைரஸால் உயிரிழந்த 72 வயது முதியவரின் உடலை அவரது வீட்டில் இருந்து மயானத்திற்கு ஜேசிபி-யில் எடுத்துச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு அம்மாநிலத்தின் எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்த விவகாரம் வெளியில் தெரிய வந்ததுடன், இரண்டு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

ஆந்திர பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் பலாசா பகுதியில் ஒய்வுபெற்ற மாநகராட்சி ஊழியர் ஒருவர், வீடு வீடாக சென்று சர்வே எடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தநிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டிலே உயிரிழந்துள்ளார். 

இதையடுத்து, அவரது வீட்டில் இருந்து சடலத்தை ஜேசிபி எந்திரத்தில் வைத்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள வீடியோவில், அதிகாரிகள் முழு உடல் பாதுகாப்பு உடைகள் அணிந்தபடி காணப்படுகின்றனர். உயிரிழந்தவரின் உடல் ஜேசிபி இயந்திரத்தின் முன்பக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. 

கொரோனா பாதிக்கப்பட்ட அந்த முதியவர், வீட்டில் வைத்தே உயிரிழந்ததை தொடர்ந்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடலால் தங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று கவலை தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, அரசு தன்னார்வலரான அவரது பேத்தி மாநகராட்சி அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்து, உடலை எடுத்துச்செல்லும் படி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த முதல்வர் அலுவலகம் தரப்பில், இது மனிதன்மையற்ற செயல் என்றும், பாதிக்கப்பட்டவரின் உடலை எடுத்துச்செல்வதற்கு உரிய விதிமுறைகளை பின்பற்ற தவறிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவத்தை கண்டித்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். "இது மனிதாபிமானமற்றது, இதுபோன்ற பாதிப்புகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த நெறிமுறைகள் ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டுள்ளன" என்று முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து, ஆந்திர பிரதேச அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து, ஸ்ரீகாகுளம் மாவட்ட ஆட்சியர் ஜே.நிவாஸ், பலாசா நகராட்சி ஆணையர் நாகேந்திர குமார் மற்றும் சுகாதார ஆய்வாளர் என்.ராஜீவ் ஆகியோரை இடைநீக்கம் செய்ய உத்தரவிட்டார்.

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடுவும் இந்த சம்பவத்தை கண்டித்து ட்வீட் செய்துள்ளார். அதில், "கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் சடலங்கள் பிளாஸ்டிக்கால் மூடப்பட்டிருக்கும் மற்றும் ஜே.சி.பி. மற்றும் டிராக்டர்களில் கொண்டு செல்லப்படுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். இந்த மனிதாபிமானமற்ற நடத்தைக்கு ஜெகன் மோகன் ரெட்டி அரசு வெட்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

.