This Article is From Aug 09, 2018

இந்தோனேசியாவின் லம்போக் தீவில் நிலநடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 300ஐ தாண்டியது

கடைசியாக கிடைத்த தகவலின்படி பலி எண்ணிக்கை 319 ஆகி உள்ளது: இந்தோனேசியாவின் முதன்மை பாதுகாப்பு அமைச்சர் விரண்டே.

இந்தோனேசியாவின் லம்போக் தீவில் நிலநடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 300ஐ தாண்டியது

இடிபாடுகளின் இடையில் தேடுதலில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள்.

Mataram, Indonesia:

இந்தோனேசியாவின் லம்போக் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை மூந்நூறைத் தாண்டியுள்ளது. நிலநடுக்கத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் மக்கள் இன்னும் உதவி கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். நிலநடுக்கம் ஏற்பட்டும் நான்கு நாட்கள் ஆன நிலையில் மோசமாக பாதிக்கப்பட்ட பல பகுதிகளை இப்போதுதான் நிவாரணக் குழுக்கள் அடையத் தொடங்கியுள்ளன.

ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆகப் பதிவான இந்நிலநடுக்கத்தில், கடைசியாக கிடைத்த தகவலின்படி பலி எண்ணிக்கை 319 ஆகி உள்ளது என்று குறிப்பிட்ட இந்தோனேசியாவின் முதன்மை பாதுகாப்பு அமைச்சர் விரண்டே, மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் சிறிய அளவிலான பின்னதிர்வுகள் மீட்புப் பணிகளைச் சிக்கலுக்கு உள்ளாக்கியுள்ளதாகவும் கூறுகிறார்.

முன்பு கிடைத்த தகவலின்படியே 1400 பேர் படுகாயம் அடைந்துள்ளனர், 15000 பேர் வரை வீட்டை இழந்துள்ளனர். இவற்றில் பெரும்பாலானோர் இன்னும் தங்களது இடிந்த வீடுகளுக்கு அருகில் கொட்டகைகள் அமைத்தும், தார்பாய்களின் அடியிலும்  தங்கி வருகிறார்கள். இங்கு போதுமான உணவு, குடிநீர், மருத்துவ வசதிகளும் இன்றி மக்கள் தவித்து வருகின்றனர். காயமடந்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்க தற்காலிமாக மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

நிலநடுக்கத்துக்குப் பின்னான அதிர்வுகளும் மக்களைக் கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளன. ரிக்டரில் 5.9 வரை பதிவான ஒரு பின்னதிர்வால் மக்கள் தாங்கள் அமைத்திருந்த கொட்டகைகளில் இருந்து அழுது, கதறிக் கொண்டே ஓடினார்கள்.

சர்வதேச நிவாரணக் குழுக்களும் அதிகாரிகளும் உதவிகளை வழங்கத் தொடங்கிவிட்டாலும் மோசமாக பாதிப்படைந்துள்ள சாலைகளால் உதவிப் பொருட்கள் மக்களை வேகமாகச் சென்று சேர்ந்தபாடில்லை. லம்போக்கின் மலைப்பாங்கான வடக்குப்பகுதியில் இது இன்னும் சிரமம். இங்கு சாலைகளில் மக்கள் அட்டைப்பெட்டிகளை ஏந்தி உணவையும் உதவியையும் கோரி நிற்கின்றனர்.

வீடுகள், பள்ளிகள், மசூதிகள் என இடிபாடுகளில் எங்கேனும் இன்னும் மக்கள் சிக்கிக்கொண்டு உயிருக்குத் தவிக்கின்றனரா என்று பல பணியாளர்கள் அவர்களைக் காப்பாற்ற இயந்திரங்களை வைத்துத் தேடி வருகின்றனர். வடக்கு லம்பொக்கில் இரு மசூதிகள் உள்ளே மக்கள் இருந்தபோது இடிந்து சரிந்ததாக அஞ்சப்படுகிறது. சில இடங்களில் இருந்து பிணமாகவும் உயிருடனும் மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் போனவர்களைப் பற்றி அவர்களது குடும்பத்தாரிடம் கேட்டு, எத்தனை பேர் இன்னும் இடிபாடுகளினுள் சிக்கி உள்ளார்கள் என்றும் கணக்கிடப்பட்டு வருகிறது.

மக்கள் உணவின்றியும் பச்சிளங்குழந்தைகளின் தாய்மார்கள் குழந்தைகளுக்குப் பால் இன்றியும் தவிக்கின்றனர். மறுபுறம் எலும்பு, தலை போன்ற இடங்களில் காயம்பட்டவர்களுக்குப் சிகிச்சை அளிக்க போதிய மருத்துவ வசதிகள் இன்றி மருத்துவர்கள் தவித்து வருகின்றனர். சுற்றுலாத் தலங்களாக இருந்த இத்தீவின் பகுதிகள் பேயடித்த சுடுகாடுகளாக மாறிக் காட்சி அளிக்கின்றன. 

 
.