This Article is From Apr 12, 2020

கொரோனா தொற்றை வெல்ல ஈஸ்டர் நமக்குக் கூடுதல் பலத்தை அளிக்கட்டும்: பிரதமர் மோடி

வரலாற்றின் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த இந்த ஈஸ்டர் பண்டிகைகள் தற்போது வீடுகளுக்குள் மட்டுமே கொண்டாடப்படுகின்றது.

கொரோனா தொற்றை வெல்ல ஈஸ்டர் நமக்குக் கூடுதல் பலத்தை அளிக்கட்டும்: பிரதமர் மோடி

பிரதமர் மோடி இன்று ஈஸ்டர் பண்டிகையையொட்டி மக்களை வாழ்த்தினார். (கோப்பு)

New Delhi:

கொரோனா தொற்றுக்கு உலக அளவில் 17 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில், இந்த ஆண்டின் ஈஸ்டர் பண்டிகையினை மக்கள் தங்கள் வீடுகளிலேயே கொண்டாடுகின்றனர். இந்தியாவிலும் இதே நிலைதான். நாடு முழுவதிலும் உள்ள தேவாலயங்கள் மூடப்பட்டிருக்கின்றன. எனவே மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கியுள்ளனர்.

இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி, “கொரோனா தொற்றை வென்று, ஆரோக்கியமான ஒரு கிரகமாக பூமியினை மாற்ற இந்த ஈஸ்டர் நமக்குக் கூடுதல் பலத்தை அளிக்கட்டும்.” என ட்விட்டர் வாயிலாக கிறித்தவர்களுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டார்.

சிலுவையில் அறையப்பட்ட யேசு கிறிஸ்து உயிர்தெழுந்த நாளை ஈஸ்டர் திருநாளாக உலகம் முழுவதும் 40 நாட்கள் நோன்பிருந்து கொண்டாடப்படுகின்றது. உலக அளவில் 2 பில்லியனுக்கும் அதிகமான கிறித்தவர்கள் இந்த பண்டிகையினை கொண்டாடுகிறார்கள். ஆனால், ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்திருக்கக்கூடிய நிலையில், தேவாலயங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

"அனைவருக்கும் மகிழ்ச்சியான மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட ஈஸ்டர் வாழ்த்துக்கள். இந்த திருவிழா எங்களுக்கு மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும், தருகிறது. மேலும், இந்த நாளில், கோவிட் -19 நமக்கு எதிராக முன்வைத்த சவாலைச் சமாளிப்பதற்கான, நம்முடைய கூட்டுத் தீர்மானத்தை உறுதிப்படுத்துவோம்" என்று ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் சமூக விலகல் குறித்துக் கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி, மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கள் உள்ளிட்டோர் தங்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளனர்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும், காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட், பாஜக தலைவர் சிவ்ராஜ் சிங் சவுகான், எல்ஜேபி தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் ஆகியோர் தங்கள் வாழ்த்துகளையும், கொரோனா தொற்றுக்கு எதிராக போராட வேண்டிய அவசியத்தையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர்.

தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8,356 ஆக உயர்ந்துள்ளது, 273 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வரலாற்றின் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த இந்த ஈஸ்டர் பண்டிகைகள் தற்போது வீடுகளுக்குள் மட்டுமே கொண்டாடப்படுகின்றது. கிறித்தவ தலைநகரான ரோம் அமைந்துள்ள இத்தாலியில் கொரோனா தொற்றால் 19 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இருட்டிற்கும், மரணத்திற்கும் முடிவு என்பது கிடையாது என போப்  பிரான்சிஸ் கூறியுள்ளார்.

.