கடந்த ஒரு வாரத்துக்கும் மேல், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை ஓய்ந்திருக்கும் நிலையில், அடுத்து வரும் நாட்களில் மழை பெய்யுமா என்பது குறித்து தகவல் தெரிவித்துள்ளார் பிரபல வானிலை கணிப்பாளர் ‘தமிழ்நாடு வெதர்மேன்' பிரதீப் ஜான்.
வெதர்மேன் தனது ஃபேஸ்புக் பதிவில், ‘இன்று முதல் கிழக்கு நோக்கி அடிக்கும் காற்று தமிழக கடலோர பகுதிகளில் தாக்கத்தை எற்படுத்த ஆரம்பித்துள்ளது. இது காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாகவோ, புயலாலோ அல்ல. எனவே, அது குறித்து வரும் வதந்திகளை நம்ப வேண்டாம்.
இதனால், இன்று இரவு முதலோ, நாளை காலை முதலோ காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யத் தொடங்கும். அந்த மழை 5 ஆம் தேதி வரை நீடிக்கும்.
அதேபோல டெல்டா பகுதிகளான திருவாரூர், நாகை, காரைக்கால் ஆகிய இடங்களுக்கு இன்று மாலை முதலே மழை பெய்யத் தொடங்கும். சென்னை, புதுச்சேரி, கடலூர் போன்ற இடங்களில் இரவு முதல் மழை ஆரம்பிக்கும். முதலில் கடலோர பகுதிகளில் தான் மழை பெய்யும். அது மெதுவாக உள் மாவட்டங்களுக்கு நகரும். இது இன்றும் நாளைக்குமான நிலைமை மட்டுமே.
6 ஆம் தேதியைப் பொறுத்தவரை, தமிழக மேற்கு மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மழைக் கொட்டும்.
கனமழையைப் பொறுத்தவரை, திருவள்ளூர், நெல்லூர், சித்தூர், காஞ்சிபுரம், நீலகிரி போன்ற இடங்களில் வாய்ப்பிருக்கிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய இடங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.