திருவாரூர் இடைத்தேர்தல் நடத்தலாமா, வேண்டாமா என்பது குறித்து அனைத்து அரசியல் கட்சிகள், முக்கிய பிரமுகர்களின் கருத்துகளைக் கேட்டு மாவட்ட தேர்தல் அதிகாரி அறிக்கை அனுப்ப வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதி, கடந்த ஆக.7 ஆம் தேதியன்று உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து, கலைஞரின் மறைவு குறித்து சட்டப்பேரவை அலுவலகத்துக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழக தேர்தல் துறைக்கு கலைஞரின் திருவாரூர் தொகுதி காலியாக இருப்பதாக சட்டப்பேரவை அலுவலகம் அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து வரும் 28ஆம் தேதி அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தலைமைத்தேர்தல் ஆணையம் அறிவித்தது. வாக்கு எண்ணிக்கை 30 ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில் வரும் 10ம் தேதி வரை நடக்கயிருக்கிறது.
இதனிடையே முக்கிய கட்சிகளான திமுக பூண்டி கலைவாணனையும், அமமுக எஸ்.காமராஜையும் தேர்தல் வேட்பாளர்களாக நேற்று அறிவித்தது. அதிமுக வேட்பாளர் யார் என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் நிவாரணப் பணிகள் முழுமையடையாத நிலையில் இந்த தேர்தல் அறிவிக்கப்பட்டது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. இடைத்தேர்தலையொட்டி திருவாரூரில், போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலால் நிவாரணப் பணிகள் பாதிக்கப்படும் என்ற குற்றச்சாட்டு எழுந்து வந்தது.
திருவாரூரில் இன்னும் புயல் நிவாரண பணிகள் முழுமையாக முடிவடையவில்லை. மக்கள் இயல்பு நிலைக்கு இன்னும் திரும்பவில்லை. இந்த சூழ்நிலையில் தேர்தல் நடைபெற்றால் அரசு நிர்வாகம் தேர்தலில்தான் கவனம் செலுத்தும். மக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, இதை கருத்தில் கொண்டு தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது.
இதைத்தொடர்ந்து, தேர்தலை ஒத்திவைக்கக் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா நேற்று மனு அளித்தார். டி.ராஜா அளித்த அந்த மனுவை விரிவாக ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, திருவாரூர் மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம், இதுதொடர்பான விரிவான அறிக்கையை தாக்கல் செய்யக்கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ விளக்கம் கேட்டுள்ளார்.
இந்நிலையில், அனைத்து அரசியல் கட்சிகள், முக்கிய பிரமுகர்களின் கருத்துகளைக் கேட்டு மாவட்ட தேர்தல் அதிகாரி அறிக்கை அனுப்ப வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளர்.
இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பதிவில், திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுள்ள அறிக்கையை, அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் திருவாரூர் மாவட்டத்துக்குட்பட்ட முக்கிய பிரமுகர்கள், விவசாய சங்க பிரதிநிதிகளின் கருத்துகளைக் கேட்டு மாவட்ட தேர்தல் அதிகாரி அறிக்கை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.