D.K. Shivakumar; பணமோசடி வழக்கில் அமைச்சர் சிவக்குமாரின் பெயரையும் இணைத்துள்ளது அமலாக்கத் துறை
New Delhi: ஹவாலா முறைகேடு மற்றும் வரி ஏய்ப்புப் புகாரில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி கர்நாடக அமைச்சர் சிவக்குமார் (D.K. Shivakumar) மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
வருமான வரித் துறை இந்த வழக்கு தொடர்பாக முன்னரே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. அதன் அடிப்படையில் தற்போது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் பிறருக்கு அமலாக்கத் துறை சீக்கிரமே நேரில் ஆஜராக சம்மன் அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, இந்த வழக்கு குறித்தான குற்றம் சுமத்தப்பட்டவர்களின் கருத்துகள் கேட்டறியப்படும்.
பரபரப்பைக் கிளப்பியுள்ள இந்த விவகாரம் குறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள், ‘எங்களுக்குக் கிடைத்தத் தகவல் மற்றும் ஆதாராங்களை வைத்துப் பார்க்கும் போது, பல கோடி மதிப்பிலான கறுப்புப் பணம் சட்டத்துக்குப் புறம்பாக பறிமாற்றப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளார்.
இந்த வழக்கில் அமைச்சர் சிவக்குமாருடன், சச்சின் நாராயண் (Sachin Narayan), ஆஞ்சநேயா அனுமந்தய்யா (Anjaneya Haumanthaiah), ராஜேந்திரா (N Rajendra) ஆகியோரும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்.
வருமான வரித் துறை வட்டாரம், ‘இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர், பெங்களூரு மற்றும் டெல்லியில் ஒரு பெரிய நெட்வொர்கையே வைத்து கறுப்புப் பணத்தை சட்டத்துக்குப் புறம்பாக பறிமாற்றம் செய்துள்ளார்’ என்று குற்றம் சாட்டுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம், நடந்த இந்த விவகாரத்துடன் தொடர்புடைய ரெய்டில் 20 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது என்று வருமான வரித்துறை வட்டாரம் தகவல் தெரிவிக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக முன்னரே பதியப்பட்டுள்ள வழக்கில், சிறப்பு நீதிமன்றம் சிவக்குமாருக்கு நிபந்தனைக்கு உட்பட்ட ஜாமீன் வழங்கியது. வரும் 20 ஆம் தேதி அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.