கொடநாடு கொலை வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Vellore:
வேலூர் மற்றும் அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், பாமக ஏ.க.மூர்த்தி ஆகியோரை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது, நான் ஏதோ கொலை செய்து விட்டதாக ஸ்டாலின் குற்றம்சாட்டி வருகிறார்.
கொடநாடு எஸ்டேட் கொலையைக் கண்டுபிடித்ததும், அந்தக் கொலைக் குற்றவாளியை சிறையில் அடைத்ததும் அதிமுக அரசுதான். ஆனால், அந்தக் குற்றவாளியை ஜாமீனில் எடுத்தது திமுகதான். இதன்மூலம், அந்தக் கொலைக்கும், திமுகவுக்கும் என்ன தொடர்பு உள்ளது என மக்கள் சந்தேகிக்கின்றனர். அந்த சந்தேகத்தைப் போக்கும் வகையில் அதிமுக அரசு விரைவில் விசாரணை நடத்தும்.
அதிமுக ஆட்சி மீது ஊழல் குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் கூறி வருகிறார். ஊழல் என்றால் அது திமுகதான். ஊழலுக்கு அக்மார்க் முத்திரை பெற்றதும் அக்கட்சிதான். ஊழலால் கலைக்கப்பட்ட ஆட்சியும் திமுக ஆட்சிதான். எனவே, ஊழல் குறித்துப் பேச திமுகவுக்கு எந்தத் தகுதியும் இல்லை.
2ஜி ஊழல் வழக்கு விசாரணையின் போது ஆ.ராசாவுக்கு நெருக்கமான அவரது நண்பர் சாதிக் பாட்சா உயிரிழந்தார். அண்மையில் அவரது நினைவு நாளில் அவரது குடும்பத்தினர், கூடா நட்பு கேடாய் முடியும் என்பதற்கு உதாரணமாய் இருந்ததாக நாளிதழ்களில் நினைவஞ்சலி விளம்பரங்கள் வெளியிட்டனர் என்றும் கூறினார்.
அதிமுகவில் மட்டுமே அடிமட்ட தொண்டர்கள் கூட முதல்வராக முடியும். அதற்கு நானே சிறந்த எடுத்துக்காட்டு. ஆனால், திமுகவில், முன்னாள் தலைவர் கருணாநிதி உயிரிழந்ததும், அவரது மகன் மு.க.ஸ்டாலின் தலைவராக பதவியேற்கிறார் என்று திமுகவை கடுமையாக சாடினார்.
மேலும், மு.க.ஸ்டாலினை முதல்வராக்க, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஒருபோதும் பிரசாரம் செய்ய மாட்டார். இந்த மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள் என்று அவர் கூறினார்.