ஜூன் 15 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 31,896 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைலைட்ஸ்
- இன்று எடப்பாடி தலைமையில் தமிழக அமைச்சரவை கூடியுள்ளது
- தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரிப்பு
- தமிழகத்திலேயே சென்னைதான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது
சென்னை தலைமைச் செயலகத்தில், கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்த, ஜெனீவா, சென்னை, ஈரோடு மற்றும் வேலூரில் உள்ள மருத்துவர்கள் மற்றும் பொது சுகாதார நிபுணர்களுடன் 6-வது முறையாக காணொளிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் பங்கெடுத்தனர்.
இந்த ஆலோசனையின்போது மருத்துவ வல்லுநர்கள், ‘சென்னை நகரத்தில் பரவி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ஊரடங்கில் கொடுக்கப்பட்ட தளர்வுகள் நீக்கப்பட வேண்டும்' என்று முதல்வர் பழனிசாமிக்கு பரிந்துரைத்துள்ளதாக உள் வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
மேலும் இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்தக் கூட்டத்தின் முடிவில் கொரோனா வைரஸ் குறித்து எடுக்கப்பட உள்ள அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு தரப்பு தெரிவிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
தமிழகத்தில் நேற்று 1,974 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 1,415 பேர். ஒட்டுமொத்த அளவில் 44,661 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 1,138 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 24,547 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 19,676 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 38 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 435 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள்.
ஜூன் 15 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 31,896 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 16,671 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 347 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தற்போது 14,199 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
சென்னையிலேயே அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 5,216 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தண்டையார்பேட்டை மண்டலத்திலும், தேனாம்பேட்டை மண்டலத்திலும் முறையே 4,082 மற்றும் 3,844 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மணலி மண்டலத்தில் மிகக் குறைவாக 448 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.