This Article is From Nov 18, 2019

முதல்வர் ஆவேன் என கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் எடப்பாடி; நடிகர் ரஜினிகாந்த்

ரஜினி என்ன அரசியல் தலைவரா? அவர் ஒரு நடிகர். அவர் சொல்வதை ஊடகங்கள் தான் பெரிதுபடுத்துகின்றன? என முதல்வர் எடப்பாடி கூறியிருந்தார்.

Advertisement
இந்தியா Edited by

ரஜினி என்ன அரசியல் தலைவரா? அவர் ஒரு நடிகர் - எடப்பாடி

தமிழக அரசியலில் நேற்று அதிசயம் நடந்தது. இன்றும் நடக்கிறது. நாளையும் நடக்கும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். 

நடிகர் கமல்ஹாசனின் 60 ஆண்டுகால திரைப்பயணத்தை சிறப்பிக்கும் வகையில், கமல்-60 என்ற நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது, களத்தூர் கண்ணம்மாவில் அவரைப் பார்த்து ஏற்பட்ட பிரமிப்பு இன்றும் மாறவில்லை. நடிகர், இயக்குநர், பாடகர் என பல பரிமாணம் எடுத்த அற்புதமான கலைஞர். எனக்கும் கமல்ஹாசனுக்கமான நட்பு உயிரோட்டமானது என்று புகழாரம் சூட்டினார். 

கமலும், நானும் வெவ்வேறு இடங்களில் இருந்தாலும், இருவரின் சித்தாந்தங்களும், கொள்கைகளும் மாறினாலும் நட்பு மாறாது, அதனால் ரசிகர்களும் அந்த அன்பை கடைபிடிக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டார். 

Advertisement

மேலும் பேசிய அவர், முதல்வர் ஆவேன் என எடப்பாடி பழனிசாமி, 2 ஆண்டுகளுக்கு முன் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். தமிழக அரசு நான்கைந்து மாதங்களில் கவிழ்ந்துவிடும் என்று 99 சதவீதம் பேர் சொன்னார்கள். ஆனால் அதிசயம் நடந்து தடைகளை தாண்டி ஆட்சி நீடித்து வருகிறது. அதுமாதிரியான அதிசயம், நேற்று நடந்தது; இன்று நடக்கிறது; நாளையும் நடக்கும் என்றார்.

முன்னதாக, தமிழகத்தில் ஆளுமைமிக்க அரசியல் தலைமைக்கு வெற்றிடம் உள்ளது என அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். அவரது இந்த பேச்சு தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

ரஜினியின் கருத்திற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, "தமிழகத்தில் வெற்றிடம் இல்லை என்பதை நடந்து முடிந்த இடைத்தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன. ரஜினி சொல்வது போல் அரசியலில் வெற்றிடம் என எதுவும் இல்லை. ரஜினி என்ன அரசியல் தலைவரா? அவர் ஒரு நடிகர். அவர் சொல்வதை ஊடகங்கள் தான் பெரிதுபடுத்துகின்றன" என்று பதிலடி கொடுத்திருந்தார்.

Advertisement