This Article is From Jul 10, 2020

தமிழகத்தில் கொரோனாவுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிக்க முதல்வர் உத்தரவு!

பிளாஸ்மா தானம் செய்பவர்கள் 18 முதல் 65 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

தமிழகத்தில் கொரோனாவுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிக்க முதல்வர் உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 3,680 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 4,163 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து, கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 82,324 ஆக அதிகரித்துள்ளது.உயிரிழப்பு மற்றும் டிஸ்சார்ஜுகளை தவிர்த்து தமிழகத்தில் தற்போது மொத்தம் 46,105 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை எடுத்து வருகின்றனர். 

தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவல் குறித்து ஆய்வு செய்ய, மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலர் தலைமையிலான 7 பேர் கொண்ட மத்திய உயர்மட்ட மருத்துவக்குழு இன்று சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஆய்வு நடத்தினர். இதைத்தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்திய மருத்துவக்குழுவினர் ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரசுக்கு பிளாஸ்மா தெரபி மூலம் சிகிச்சை அளிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சோதனை முறையில் பிளாஸ்மா தெரபி மூலம் 18 பேர் குணமடைந்ததால் ரூ.2 கோடியில் பிளாஸ்மா வங்கி நிறுவ தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிளாஸ்மா சிகிச்சை விரைவில் தொடங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை ஸ்டான்லி, ஓமந்தூரார், திருச்சி, சேலம், கோவை அரசு மருத்துவமனைகளிலும் பிளாஸ்மா தானம் பெறப்படும் என்றும் பிளாஸ்மா தானம் செய்பவர்கள் 18 முதல் 65 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் 14வது நாளில் பிளாஸ்மா தானம் செய்யலாம். சர்க்கரை நோய், இருதய நோய், சிறுநீரக நோய், புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்கள் தானம் செய்ய இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

.