This Article is From Nov 16, 2018

‘புயல் பாதித்த இடங்களில் நேரில் சென்று ஆய்வு செய்வேன்!’- முதல்வர் எடப்பாடி பழனிசாமி

போர்க் கால அடிப்படையில் எல்லா இடங்களில் மீட்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தமிழக அரசு முன்னெச்சரிக்கையாக எடுத்த நடவடிக்கைகளால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது

‘புயல் பாதித்த இடங்களில் நேரில் சென்று ஆய்வு செய்வேன்!’- முதல்வர் எடப்பாடி பழனிசாமி

வங்கக்கடலில் உருவான ‘கஜா' புயல் கரையைக் கடந்துள்ளது. தற்போது புயல் திண்டுக்கல்லில் மையம் கொண்டுள்ளது. நள்ளிரவு 12 மணிக்கு மேல், கஜா புயல் நாகை - வேதாரண்யத்திற்கு இடையே கரையைக் கடந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அரசு சார்பில் புயலின் தாக்கத்தை சமாளிக்க எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கியுள்ளார்.

சேலம், ஓமலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் பழனிசாமி, ‘கஜா புயல் காரணமாக இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இறந்தவர்களின் குடும்பத்துக்கு 10 லட்ச ரூபாய் நிவாரணம் கொடுக்கப்படும். அதேபோல, புயல் காரணமாக படுகாயமடைந்தவர்கள்க்கு 1 லட்ச ரூபாயும், சிறிய அளவு காயமடைந்தவருகளுக்கு 25 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக கொடுக்கப்படும்.

110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் நாகையில் கஜா புயல் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. புயல் பாதித்த இடங்களில் அமைச்சர்களும், சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளும் தங்கி பணி செய்து வருகின்றனர். இதனால், புயல் பாதித்த இடங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பும். மக்கள் அச்சப்பட வேண்டாம்.

அமைச்சர்கள், அதிகாரிகள் சேதம் குறித்து தெரியபடுத்தபட்ட‌ பின்னர் தான் மத்திய அரசிடம் நிவாரண நிதி குறித்து கேட்கப்படும். புயல் பாதித்த இடங்களுக்கு நானே நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளேன். போர்க் கால அடிப்படையில் எல்லா இடங்களில் மீட்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தமிழக அரசு முன்னெச்சரிக்கையாக எடுத்த நடவடிக்கைகளால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது' என்று கூறியுள்ளார்.

.