This Article is From Oct 25, 2019

“பஞ்சமி நில விவகாரம் உண்மையாக இருந்தால்…”- திமுக-வுக்கு செக் வைக்கும் Edappadi Palanisamy!

Edappadi Palanisamy - "மக்கள் இந்த முறை ஏமாறவில்லை. இது உண்மைக்கு கிடைத்த வெற்றி”

Advertisement
தமிழ்நாடு Written by

Edappadi Palanisamy - “அடுத்தடுத்து வரவுள்ள தேர்தல்களுக்கு முன்னோட்டமாகத்தான் இந்த தேர்தல் இருந்துள்ளது."

தமிழகத்தில் காலியாக இருந்த சட்டமன்றத் தொகுதிகளான விக்கிரவாண்டி (Vikravandi) மற்றும் நாங்குநேரிக்கு (Nanguneri), கடந்த 21 ஆம் தேதி தேர்தல் நடந்தது. தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன. இரு தொகுதிகளிலும் ஆளுங்கட்சியான அதிமுக-வே (ADMK) தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. விக்கிரவாண்டியில் திமுக-வும், நாங்குநேரியில் திமுக (DMK) கூட்டணியில் இருந்த காங்கிரஸும் (Congress) போட்டியிட்டன. இரண்டு தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் இரண்டாம் இடத்தையே பிடிக்க முடிந்தது. அதிமுக வெற்றி உறுதியாகிவிட்ட நிலையில், சென்னை, ராயப்பேட்டையில் இருக்கும் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 

செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த எடப்பாடி, இடைத் தேர்தல் வெற்றிக்கு காரணம் என்ன என்பது குறித்து விளக்கியபோது, “நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், நாங்கள் உண்மையை முன்வைத்துப் பிரசாரம் செய்தோம். ஆனால், எதிர்கட்சிகள் பொய்களை அவிழ்த்து விட்டார்கள். அப்போது, மக்கள் அவர்களுக்கு ஏமாந்து வாக்களித்து விட்டார்கள். 

தற்போது நடந்த இடைத் தேர்தல் பிரசாரத்தின்போதும், நாங்கள் உண்மையை மட்டுமே பேசினோம். எதைச் செய்ய முடியுமோ, அதை மட்டும்தான் சொன்னோம். திமுக-வோ பொய்களை அவிழ்த்துவிட்டது. மக்கள் இந்த முறை ஏமாறவில்லை. இது உண்மைக்கு கிடைத்த வெற்றி,” என்றார். 

Advertisement

மேலும் அவர், “அடுத்தடுத்து வரவுள்ள தேர்தல்களுக்கு முன்னோட்டமாகத்தான் இந்த தேர்தல் இருந்துள்ளது. இது சாதாரண வெற்றி அல்ல. வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாகும்,” என்று பெருமிதத்துடன் கூறினார். 

தொடர்ந்து, ஒரு நிருபர், ‘முரசொலி' அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாக சொல்லப்பட்டு வரும் குற்றச்சாட்டு குறித்து கேட்டார். அதற்கு திமுக-வுக்கு நெருக்கடி கொடுக்கும் விதத்தில் எடப்பாடியார், “பஞ்சமி நில விவகாரத்தை கவனித்து வருகிறோம். அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். அது குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று எச்சரிக்கை விடுக்கும் தொனியில் பேசியுள்ளார். 
 

Advertisement
Advertisement