This Article is From Jan 12, 2019

தன்னை குற்றவாளி என சொன்ன ஆவணப்படம்… கொதித்தெழுந்த முதல்வர்! #FullSpeech

நேற்று ஆவணப்படம் குறித்து மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில், ‘முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ஆதாரம் இதோ. அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்’ என்று வலியுறுத்தி இருந்தார்.

தன்னை குற்றவாளி என சொன்ன ஆவணப்படம்… கொதித்தெழுந்த முதல்வர்! #FullSpeech

தெஹெல்கா இதழின் முன்னாள் பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி சம்பந்தமாக ஒரு ஆவணப்படம் வெளியிட்டுள்ளார். அதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமாக இருந்த கோடநாடு எஸ்டேட்டில் தொடர்ச்சியாக நடந்த கொலை சம்பங்களுக்கு அவர்தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இது தமிழக அளவில் பெரும் பூகம்பத்தைக் கிளப்பிய நிலையில், இன்று ஆவணப்படம் குறித்து விளக்கம் அளித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய எடப்பாடி, ‘மேத்யூ சாமுவேல் நேற்று ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் என்னை சம்பந்தப்படுத்தி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் சொல்லப்படும் தகவல்கள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானது. இது குறித்து யார் பின்னால் இருக்கிறார்கள் என்று கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

கோடநாடு எஸ்டேட் தொடர்பான விவகாரத்தில் பல்வேறு நபர்கள் கைது செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது. அம்மா அவர்கள் கட்சி நிர்வாகிகளிடம் ஆவணங்கள் பெற்று கோடநாட்டில் வைத்திருந்தாக அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி எந்த ஆவணங்களையும் அவர் வைத்திருக்கவில்லை. அவர் மீது களங்கத்தை கற்பிப்பது கண்டிக்கத்தக்கது. அவர் எல்லோரிடத்திலும் அன்பாக பழகியவர்.

இதற்கு பின்புலத்தில் இருப்பவர்கள் யாரென்று கண்டுபிடித்து, மக்கள் முன்னிலையில் நிறுத்தப்படுவார்கள். திராணியற்ற, முதுகெலும்பு இல்லாதவர்கள் தான் இப்படிப்பட்ட செயலில் ஈடுபடுவார்கள். அரசியலில் எங்களை எதிர்கொள்ள முடியாதவர்கள், குறுக்கு வழியை தேர்ந்தெடுத்து செயல்பட்டுள்ளார்கள். விசாரணையில் உண்மை வரும்' என்று கொதித்தார்.

தொடர்ந்து ஸ்டாலின் குறித்தும் திமுக குறித்தும் பேசிய முதல்வர், ‘திமுக-வைப் பொறுத்தவரை எதாவது ஒரு வழக்கை, எங்கள் அரசு மீது போட்டுக் கொண்டிருப்பார்கள். என் மீதும் பல வழக்குகளைப் போட்டுள்ளார்கள். அவர்களுக்கு தொடர்ந்து என் மீது வழக்கு போடுவதுதான் வேலை. தொழிற்சாலைகள் வந்தாலும் வழக்கு போடுவார்கள். தொழிற்சாலைகள் வரவில்லை என்றாலும் வழக்கு போடுவார்கள். அவர்களுக்கு வேலையே இல்லை.

உள்ளாட்சித் தேர்தலை நடத்தாதற்கு தமிழக அரசை தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். ஸ்டாலினும் அவர் நடத்தும் கிராம சபைக் கூட்டத்தில் இதைச் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்ய வைத்தது திமுக-வும், மு.க.ஸ்டாலினும்தான். ஆனால், இன்று நாடகம் போடுகிறார்.

திமுக ஆட்சியில் இருந்தபோது, உள்ளாட்சித் துறை அமைச்சராக பொறுப்பேற்றவர் ஸ்டாலின்தான். அவர்தான் கிராமங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தந்திருக்க வேண்டும். ஆனால், அப்படி செய்யவில்லை. பொறுப்பில் இருந்தபோது எதுவும் செய்யாமல், இப்போது ஸ்டாலின் கிராமங்களுக்கு சென்று ‘நீர் இல்லை, அடிப்படை வசதி இல்லை' என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது' என்று முடித்துக் கொண்டார்.

நேற்று ஆவணப்படம் குறித்து மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில், ‘முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ஆதாரம் இதோ. அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்' என்று வலியுறுத்தி இருந்தார்.

.