கரூர் மாவட்டத்தில் இருக்கும் மாற்று அமைப்பைச் சேர்ந்த பலர் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக-வில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பழனிசாமி, ‘முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, பச்சோந்தி போன்றவர். அடிக்கடி கட்சியை மாற்றிக் கொள்பவர்' என்று சாடினார்.
தொடர்ந்து பேசிய பழனிசாமி, ‘பல்வேறு கட்சிகளுக்கு சென்று வந்தவர் செந்தில் பாலாஜி. பச்சோந்தி கூட நிறம் மாற சற்று நேரம் எடுத்துக் கொள்ளும். ஆனால், 5 கட்சிக்கு அவர் தாவி உள்ளார். எந்தக் கட்சியிலிருந்து அவர் வந்தாரோ மறுபடியும் அந்தக் கட்சியிலேயே போய் ஐக்கியமாகியுள்ளார்.
செந்தில் பாலாஜி ஒரு அரசியல் வியாபாரி. அதிமுக-வுக்கு வந்தார். வியாபாரத்தைத் தொடங்கினார். இங்கு முடித்துக் கொண்டு அடுத்த இடமான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை நோக்கி நகர்ந்தார். அங்கு வியாபாரம் சரியில்லை. ஆகவே, தற்போது திமுக-வை நோக்கி சென்றுள்ளார். கொள்கை பிடிப்பு இல்லாதவர் அவர்.
அவர் அதிமுக-வில் இளைஞராக இருக்கும்போது சேர்ந்தார். நமது அம்மா, அவருக்கு சட்டமன்ற உறுப்பினராக வாய்ப்பு கொடுத்தார். தொடர்ந்து போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் அவரை உயர்த்திப் பார்த்தார். ஆனால், அந்ந நன்றியெல்லாம் மறந்துவிட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் செந்தில் பாலாஜி.
அதிமுக-வை உடைக்க வேண்டும். இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என திட்டமிட்டார். அமமுக-வில் இணைந்து அதற்கான சதித் திட்டங்களை தீட்டினார். ஆனால், அவரால் அங்கு வெகு காலத்துக்கு தொடர முடியவில்லை. இதுதான் கடவுள் செயல்.
செந்தில் பாலாஜியைப் போன்றிருக்கும் அரசியல் வியாபாரிகள் அவ்வப்போது அதிமுக-வை கவிழ்க்க வருவார்கள். அவர்கள் வியாபாரம் பலிக்கவில்லை என்றால் சென்றுவிடுவார்கள். ஆனால், நாம் அவர்களையெல்லாம் பொருட்படுத்தக் கூடாது' என்று பேசினார்.