சேலத்துக்கு சென்றிருந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்கள் சந்திப்பின்போது, 8 வழிச் சாலைத் திட்டத்துக்கான அவசியம் குறித்து பேசினார்.
முதல்வர் பழனிசாமி பேசுகையில், ‘நாளுக்கு நாள் தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகின்றன. அதற்கு ஏற்றாற் போல, இங்கு உட்கட்டமைப்பு வசதிகள் அதிகபடுத்தப்பட வேண்டும். அதன் ஒரு பகுதியாகவே சென்னை - சேலம் 8 வழிச் சாலை கொண்டு வரப்படுகிறது.
இப்போதுதான் நாம், 8 வழிச் சாலை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். வெளிநாடுகளில் 30 ஆண்டுகளுக்கு முன்னரே 8 வழிச் சாலை, 10 வழிச் சாலைகள் அமைக்கப்பட்டு விட்டன. இதனால் அங்கு மக்கள் நல்ல வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள்.
தமிழக மக்களும் நல்ல வாழ்க்கையைப் பெற வேண்டும் என்றுதான் நாங்களும் 8 வழிச் சாலையைக் கொண்டு வருகிறோம். யாரையும் பாதிப்புக்கு உள்ளாக்க வேண்டும் என்ற நோக்கில் வளர்ச்சித் திட்டங்கள் அமல்படுத்தப்படவில்லை' என்று கூறினார்.
இதையடுத்து நிருபர் ஒருவர், ‘விவசாயிகள் 8 வழிச் சாலைகள் அமைக்கப்படும் நிலையில், அபகரிக்கப்பட்ட எங்கள் நிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை என்று சொல்கிறார்களே' என்று கேட்டதற்கு,
முதல்வர், ‘அது தவறான தகவல். நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. நில அபகரிப்பு என்பது இன்றைய ஆட்சியில் செய்வதல்ல. ஏற்கெனவே, திமுக ஆட்சியில் இது நடந்தது. அந்த ஆட்சியில் மக்கள் ஏமாற்றப்பட்டனர்.
ஆனால் எங்கள் ஆட்சியில், நிலத்தை இழக்கும் அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படுகிறது. வெறும் 11 சதவிகிதத்தினர்தான், 8 வழிச் சாலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். மீதமுள்ள 89 சதவிகிதம் மக்கள், 8 வழிச் சாலைக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்' என்று பதிலளித்தார்.