முதல்வர், சிரித்துக் கொண்டே, ‘குதர்க்கமா கேள்வி கேட்கக் கூடாது’ என்று மழுப்பியுள்ளார்.
ஹைலைட்ஸ்
- அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக உள்ளன
- பாமக-வுக்கு கூட்டணியில் 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன
- பாஜக-வுக்கு கூட்டணியில் 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. கடந்த காலங்களில் அதிமுக-வை கடுமையாக விமர்சித்த பாமக-வுடன் ஏன் கூட்டணி வைக்கப்பட்டது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு முதல்வர், சிரித்துக் கொண்டே, ‘குதர்க்கமா கேள்வி கேட்கக் கூடாது' என்று மழுப்பியுள்ளார்.
கூட்டணி குறித்து இன்று சேலத்தில் செய்தியாளர்கள் மத்தியில் முதல்வர் பழனிசாமி பேசுகையில், ‘பாமக-வுடன் நாங்கள் மட்டுமா கூட்டணி வைத்திருக்கிறோம். கடந்த காலங்களில் திமுக-வே அவர்களுடன் கூட்டணி வைத்துள்ளது. அப்போதெல்லாம் பாமக, திமுக-வை கடுமையாக விமர்சனம் செய்ததில்லையா. தேர்தல் நேரங்களில் கட்சி வெற்றி பெற வேண்டம். அந்த நோக்கில்தான் கூட்டணி அமைப்பது. அதற்கும் கொள்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என்றார்.
தொடர்ந்து செய்தியாளர் ஒருவர், ‘இருந்தாலும் பாமக-வுடன் கூட்டணி வைத்துள்ளது நெருடலாக இல்லையா?' எனக் கேட்க, ‘சும்மா குதர்க்கமாகவே கேள்வி கேட்கக் கூடாது' என்று சொல்லி சிரித்துக் கொண்டே மழுப்பினார்.
மேலம் அவர், ‘தேமுதிக-வுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அது குறித்து இன்னும் சில நாட்களில் முடிவு எட்டப்படும்' என்றார். இறுதியாக, ‘தினகரன் 38 இடங்களில் அல்ல, இந்தியாவில் இருக்கும் 534 தொகுதிகளிலும் போட்டியிடலாம். அது மிகப் பெரிய கட்சி இல்லையா. அதனால் அப்படி போட்டியிடுவதுதான் சிறப்பானதாக இருக்கும்' என்று முடித்தார்.