'ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் உணர்வை ஏற்று, மத்திய அரசு அறிவித்த மும்மொழி கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்'
ஹைலைட்ஸ்
- புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை வலியுறுத்தப்படுகிறது
- மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம் என முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
- அதற்கு விசிக தலைவர் திருமாவளவன் வரவேற்பு
புதிய கல்விக் கொள்கையில், மும்மொழிக் கொள்கை பின்பற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதை எதிர்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினருமான தொல்.திருமாவளவன் வரவேற்றுள்ளார்.
முன்னதாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், ‘தற்போது மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையில், மும்மொழி கொள்கை இடம் பெற்று இருந்தாலும், அதிமுக அரசு, மும்மொழிக் கொள்கையினை தமிழ்நாட்டில் எப்போதும் அனுமதிக்காது என்றும், இருமொழி கல்விக் கொள்கையை மட்டுமே தொடர்ந்து பின்பற்றும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மக்களின் உணர்வும், அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உட்பட பெரும்பாலான அரசியல் கட்சிகளும், இரு மொழி கொள்கையை பின்பற்றுவதையே கொள்கையாக கொண்டுள்ளனர். இந்த சூழ்நிலையில், மத்திய அரசு அறிவித்த தனது புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கல்வி இடம் பெற்றிருப்பது வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கின்றது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் உணர்வை ஏற்று, மத்திய அரசு அறிவித்த மும்மொழி கொள்கையை மறுபரிசீலனை செய்து, அந்தந்த மாநிலங்கள் தங்களின் கொள்கைக்கு ஏற்ப செயல்படுத்திக் கொள்ள பாரத பிரதமர் அவர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோ, பாதிப்பு ஏற்படும் போது, அந்த பாதிப்பினைக் களைய உடனடி நடவடிக்கை எடுக்கும் அரசு, அதிமுக அரசுதான் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு திருமாவளவன், “இரு மொழிக் கொள்கையையே தமிழகம்ஏற்கும். இரு மொழிக் கொள்கையைத்தான் ஏற்க முடியும் என்கிற தமிழக அரசின் முடிவை விசிக வரவேற்கிறது. பொது மக்களின் உணர்வுகளையும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையையும் ஏற்று தமிழக அரசு இந்த நிலைப்பாட்டை மேற்கொண்டிருப்பது பாராட்டுதலுக்குரியது. களங்கத்தைத் தவிர்க்கும் கனமான முடிவு” என வரவேற்றுக் கருத்து தெரிவித்துள்ளார்.