"நீட் கூடாதென தேர்தல் அறிக்கை- சட்டமுன்வடிவில் சொன்னதெல்லாம் அடிமை நாடகத்தின் அத்தியாயங்களா?”
மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்காக எழுதப்படும் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ள தேதியை அறிவித்துள்ளது மத்திய அரசு. இந்த உத்தரவு திரும்பப் பெறப்பட வேண்டும் என்று பல எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன. ‘கொரோனா தொற்றுப் பரவல் காலத்தில் மாணவர்களுக்கு இப்படிப்பட்ட சுமை தேவையா?' என்று எதிர்க்கட்சிகளால் கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்கு வந்த பின்னர் நீட் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு” என்று பேசியுள்ளார்.
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து குரல்கள் எழுந்து வரும் நிலையில், அந்த தேர்வு நடத்துவதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் முதல்வர் பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.
முதல்வர் பழனிசாமியின் இந்தக் கருத்தை சுட்டிக்காட்டி, திமுகவின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “கொரோனா காலத்தை பயன்படுத்தியாவது எப்போதும் நீட் வேண்டாம் என்பார் என பார்த்தால், இப்போது மட்டும் வேண்டாம்-பின்னால் நடத்தலாம் என்கிறார் முதல்வர். இது தமிழக மாணவர்களுக்குச் செய்யும் துரோகம். நீட் கூடாதென தேர்தல் அறிக்கை- சட்டமுன்வடிவில் சொன்னதெல்லாம் அடிமை நாடகத்தின் அத்தியாயங்களா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், ‘‘கொரோனாவுக்குப் பிறகு நீட் தேர்வு நடத்தலாம்' என முதல்வர் பழனிசாமி சொல்லி இருப்பது பச்சைத் துரோகம்! நிரந்தர விலக்கு கோரி சட்ட முன்வடிவுகளை அனுப்பிவிட்டு, அதற்கு மாறாக பேசுவது விசித்திரம்! நாம் கேட்பது தற்காலிக விலக்கு அல்ல! நிரந்தர விலக்கு. அதிமுக நழுவினாலும் திமுக அனுமதிக்காது' என்று கொதித்துள்ளார்.