This Article is From Sep 07, 2018

கல்லூரி மாணவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுரை

பேருந்தில் சென்னை மாநில கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தியுடன் வந்தது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது

கல்லூரி மாணவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுரை

சென்னை : வன்முறையை கைவிட்டுவிட்டு படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என கல்லூரி மாணவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுரை கூறியுள்ளார்.

கல்லூரி மாணவர்கள் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் பொது வெளியில் சுற்றி திரியும் சம்பவங்கள் சமீபத்தில் அதிகரித்துள்ளன. பேருந்தில் சென்னை மாநில கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தியுடன் வந்தது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சென்னை பல்கலை கழகத்தின் நூற்றாண்டு வைர விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

நாட்டின் எதிர்காலம் மாணவர்களின் கைகளில்தான் உள்ளது. பல்வேறு சமூக பிரச்சனைகளை அறிவுப்பூர்வமாக மட்டுமே தீர்க்க முடியும். உணர்ச்சிகளால் பிரச்சனைகளை சரி செய்ய முடியாது. மாணவர்கள் தங்களது முழு கவனத்தையும் படிப்பில்தான் செலுத்த வேண்டும். ஆனால் புத்தகங்களுக்கு பதிலாக சில மாணவர்கள் ஆயுதங்களை வைத்திருப்பது வருத்தம் அளிக்கிறது.

மாணவர்கள் வன்முறையை கைவிட வேண்டும். அவர்களுக்கு சமூக பொறுப்பு உள்ளது என்றும், மாநில மற்றும் நாட்டின் வளர்ச்சியில் அவர்கள் பங்களிக்க வேண்டும் என்றும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கூறியதை நினைவுபடுத்துகிறேன். கல்வியில் தேசிய சராசரியை விடவும் தமிழகம் முன்னணி மாநிலமாக உள்ளது. இவ்வாறு முதலமைச்சர் கூறினார்.

.