This Article is From Nov 18, 2018

‘கஜா புயலால் 1.27 லட்சம் மரங்கள் சாய்ந்துள்ளன!’ - முதல்வர் ‘பகீர்’ தகவல்

கஜா புயல் காரணமாக 33 பேர் உயிரிழந்துள்ளதாக எனக்குத் தகவல் வந்தது. அதில் 20 ஆண்கள், 11 பெண்கள் மற்றும் 2 சிறுவர்கள் அடக்கம்

‘கஜா புயலால் 1.27 லட்சம் மரங்கள் சாய்ந்துள்ளன!’ - முதல்வர் ‘பகீர்’ தகவல்

தமிழக அளவில் கஜா புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘கஜா புயலால் தமிழக அளவில் இதுவரை 1.27 லட்சம் மரங்கள் சாய்ந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது' என்று தகவல் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும், 'தற்போது 351 முகாம்களில் 1,75,500 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயல் வருவதற்கு முன்னரே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 471 முகாம்களில் 82 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இதனால் பெருமளவு பாதிப்பு தவிர்க்கப்பட்டது.

இதுவரை கஜா புயல் காரணமாக 33 பேர் உயிரிழந்துள்ளதாக எனக்குத் தகவல் வந்தது. அதில் 20 ஆண்கள், 11 பெண்கள் மற்றும் 2 சிறுவர்கள் அடக்கம்.

அதேபோல, 70 கால்நடைகள், 291 செம்மறி ஆடுகள், 1,296 கோழிகள், 158 ஆடுகளும் புயல் காரணமாக இறந்துள்ளன. மேலும் 30 மான்களும் கஜா புயலால் இறந்துள்ளன.

தமிழக அளவில் இதுவரை 1.27 லட்சம் மரங்கள் சாய்ந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகலாம். கடலோர மாவட்டங்களில் 30,000 மின் கம்பங்கள் சாய்ந்தோ ஒடிந்தோ இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, 105 துணை மின் நிலையங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பாதிப்பை சரி செய்ய 10,000 ஊழியர்கள், போர்க் கால அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர்.

புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் 203 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மாநிலம் முழுவதும் 435 நடமாடும் மருத்துவ முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. அரசின் அமைச்சர்களும் அதிகாரிகளும் தொடர்ந்து புயலால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் தங்கி வேலை செய்து வருகின்றனர். மீட்பு நடவடிக்கைகள் வேகமாக நடைபெறும்' என்று தெரிவித்துள்ளார்.

.