அவர் ரூ .11,000 செலுத்தத் தவறியதால் அவரது கால்கள் மற்றும் கைகள் கட்டப்பட்டதாக அந்த நபரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.
Bhopal: மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த முதியவர் ஒருவரை அம்மருத்துவமனை நிர்வாகம் கை, கால்களை கட்டி வைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம், ஷாஜாப்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பந்தப்பட்ட முதியவர் மருத்துவக் கட்டணமாக ரூ,11 ஆயிரம் தரவேண்டியிருந்து. ஆனால், முன்னதாக 5 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டுவிட்டது. அதன் பின்னர் தங்களால் முழு கட்டணத்தையும் கொடுக்க இயலவில்லை என பாதிக்கப்பட்டவரின் மகள் கூறியுள்ளார். மேலும், “எனவேதான் அவரை மருத்துவமனை நிர்வாகம் கை, கால்களை கட்டி வெளியேறிவிடாதவாறு வைத்துள்ளது“ என மகள் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் மாநில முதல்வர் சிவராஜசிங் சவுகான் இந்த சம்பவதை கவனத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். மேலும், இது குறித்த விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
கை, கால்கள் கட்டப்பட்டுள்ள நபரின் உடலில் எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வு உள்ள காரணத்தினால்தான் அவரை கட்டி வைத்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இல்லையெனில் அவர் இதர பொருட்களை உடைக்கக்கூடும் என்கிற அச்சத்தின் காரணமாகத்தான் இந்த முடிவினை மருத்துவமனை நிர்வாகம் மேற்கொண்டுள்ளதாக விளக்கம் தெரிவித்துள்ளது. அதே போல மனிதாபிமான அடிப்படையில் அவருடைய மருத்துவக் கட்டணத்தை தள்ளுபடி செய்ததாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மருத்துவமனையின் மீது மனித உரிமை மீறல் போன்றவற்றை கருத்தில் கொண்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.