சிவப்பு டி-சர்ட் அணிந்த ஒருவர் சாலை பேரணியின் போது, கெஜ்ரிவாலை தாக்கினார்.
New Delhi: டெல்லியில் கடந்த வாரம் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அவரது கன்னத்தில் அறைந்த நபர் அதற்காக வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு சுரேஷ் அளித்த பேட்டியில், அன்று ஏன் அப்படி நடந்து கொண்டேன் என எனக்கு தெரியவில்லை. நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவன் இல்லை. இச்சம்பவத்திற்கு நானே முழு பொறுப்பு. நான் போலீஸ் காவலில் இருக்கும்போதும் எனக்கு எவ்வித தொந்தரவும் ஏற்படவில்லை. என்னை யாரும் துன்புறுத்தவும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் திறந்த வாகனத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் ஓடிவந்து வாகனத்தின் மீது ஏறி, கெஜ்ரிவாலின் கன்னத்தில் அறைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அரவிந்த் கெஜ்ரிவால் சற்று தடுமாறி நிலைகுலைந்தார்.
அவரை தாக்கிய சுரேஷ் (33) என்பவரை ஆம் ஆத்மி தொண்டர்கள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர் மீது டெல்லி காவல்துறையின் கிரிமினல் சட்டப்பிரிவு-ன் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் நீதிபதிகள் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதைத்தொடர்ந்து, கைதான சுரேஷை 2 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டார்.