This Article is From May 17, 2019

கோட்சே தேசபக்தர் என்று கூறியதற்கு பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரக்யா சிங்!

Election: நான் பாஜகவின் உண்மையான சேவகி, கட்சி மீது முழு நம்பிக்கை வைத்துள்ளேன். கட்சியின் நிலைப்பாடு என்னவோ, அதுவே என்னுடைய நிலைப்பாடு என பிரக்யா சிங் (Pragya Thakur) கூறியுள்ளார்.

Lok Sabha Elections 2019: பிரக்யா சிங் போபால் தொகுதி பாஜக வேட்பாளர் ஆவார்.

Bhopal:

கோட்சே தேசபக்தர் என்று கூறியதற்கு, பாஜக சார்பில் கண்டனம் தெரிவித்ததையடுத்து தம்முடைய கருத்துக்கு பிரக்யா சிங் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த வாரம் பரப்புரையில் ஈடுபட்ட போது கூட்டத்தில் பேசிய அவர், முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் இடம் என்பதால் இதனைச் சொல்லவில்லை. காந்தியார் சிலைக்கு முன்பு நின்றுக் கொண்டு இதனைச் சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று கூறினார்.

கமல்ஹாசனின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு பலரும் கண்டனங்களும், ஆதரவுகளும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மத்திய பிரதேசம் மாநிலம், போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யா தாகூர் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்துக்கு பதில் தெரிவித்தார்.

அதில், நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தராக இருந்தார், இருக்கிறார், இன்னும் இருப்பார். அவரை தீவிரவாதி என்று அழைப்பவர்களுக்கு மக்கள் தேர்தலில் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து, நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் கூறியதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. கோட்சே பற்றிய பிரக்யா சிங்கின் கருத்தில் பாஜகவிற்கு உடன்பாடில்லை என்றும் இதற்காக அவர் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக தலைமை கூறியது. மேலும், பிரக்யாவின் கருத்து தொடர்பாக அவரிடம் பாஜக சார்பில் விளக்கம் கேட்கப்படும் என பாஜக செய்தி தொடர்பாளர் ஜி.வி.எல்.நரசிம்மராவ் கூறினார்.

இந்நிலையில், பாஜக சார்பில் கண்டனம் தெரிவித்ததை அடுத்து தம்முடைய கருத்துக்கு பிரக்யா சிங் மன்னிப்பு கோரியுள்ளார்.

இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பிரக்யா அளித்த பேட்டியில், நான் பாஜகவின் உண்மையான சேவகி, கட்சி மீது முழு நம்பிக்கை வைத்துள்ளேன். கட்சியின் நிலைப்பாடு என்னவோ, அதுவே என்னுடைய நிலைப்பாடு.

நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என்று நான் கூறியது எனது தனிப்பட்ட கருத்தாகும், யாரையும் காயப்படுத்த வேண்டும் என்பது எனது நோக்கமல்ல. அப்படி யாரையேனும் எனது கருத்து காயப்படுத்தியிருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நாட்டிற்காக காந்தி செய்த எதையும் மறக்க முடியாது. எனது கருத்துக்கள் ஊடகங்களால் திரித்து கூறப்பட்டுள்ளன என்று அவர் கூறியுள்ளார்.

.