மக்களவை தேர்தலின்போது 909 விதி மீறல் வழக்குகள் சமூக வலைதளங்கள் மீது போடப்பட்டன.
New Delhi: மகாராஷ்டிரா, அரியானா சட்டமன்ற தேர்தல் உள்பட அடுத்து வரும் தேர்தல்களில் நடத்தை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று சமூக வலைதளங்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பணம் பெற்றுக் கொண்டு தகுதியற்ற நபர்களை விளம்பரப்படுத்துவதற்கு எதிராக, கடந்த மக்களவை தேர்தலின்போது நடத்தை விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வகுத்தது. இந்த விதிமுறைகள் மார்ச் 30-ம்தேதி நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டன. இதனை இப்போது வரவிருக்கும் மகாராஷ்டிரா, அரியானா தேர்தல்கள் உள்பட அடுத்து வரும் தேர்தல்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது-
IAMAI எனப்படும் இந்திய இன்டர்நெட் மற்றும் மொபைல் அசோசியேஷன், தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றுவதாக ஒப்புக் கொண்டுள்ளன. மகாராஷ்டிரா, அரியானா சட்டமன்ற தேர்தல் உள்பட இனி அடுத்து வரும் தேர்தல்களிலும், தேர்தல் ஆணையம் வகுத்திருக்கும் விதிகளை சமூக வலைளதங்கள் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மக்களவை தேர்தலின்போது நடத்தை விதிகளை மீறியதாக 909 வழக்குகள் சமூக வலைதளங்கள் மீது போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விதிகளின்படி, வாக்குப்பதிவு முடிவதற்கு 48 மணி நேரங்களுக்கு முன்பிருந்து சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்ய எந்தவொரு கட்சிக்கும் அனுமதி கிடையாது. இந்த சில மணிநேரம் அமைதிக்கான காலம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் மக்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கப்போகும் பிரதிநிதிகள் குறித்து சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும்.
இதேபோன்று, சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்வதில் அரசியல் கட்சிகள் வெளிப்படைத் தன்மை கொண்டிருக்க வேண்டும் என்றும் விதிகள் கூறுகின்றன.