பிரதமர் மோடி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பிரசாரம் மேற்கொண்டனர்.
Jaipur: ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் நிறைவுபெற்றுள்ளது. வரும் வெள்ளிக் கிழமை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு கடந்த சில வாரங்களாக தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்றது. மொத்தம் 199 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் 2,274 வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர்.
ராஜஸ்தானில் சட்டசபை தொகுதிகள் மொத்தம் 200 உள்ளன. இதில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ஒருவர் மரணம் அடைந்ததால் ராம்கர் தொகுதியில் மட்டும் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் குறித்து ராஜஸ்தான் மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஆனந்த் குமார் கூறுகையில், '' தேர்தல் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவுக்கு வந்தது. டிசம்பர் 7-ம்தேதி வெள்ளிக் கிழமையன்று மொத்தம் 199 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது'' என்றார்.
ராஜஸ்தானில் 4.7 கோடி வாக்காளர்கள் உள்ளனர். விவசாயிகள் பிரச்னை மற்றும் ஊழலை மையமாக வைத்து தேர்தல் பிரசாரம் நடத்தப்பட்டு வந்தது. பாஜக சார்பாக பிரதமர் நரேந்திர மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பிரசாரம் மேற்கொண்டனர்.
காங்கிரஸ் கட்சியில் தலைவர் ராகுல் காந்தி, மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட், முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்டோர் வாக்கு சேகரித்தனர். பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியும் இங்கு பிரசாரம் மேற்கொண்டார். டிசம்பர் 7-ம்தேதி தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் டிசம்பர் 11-ம்தேதி வெளியிடப்படுகின்றன.
.