This Article is From Mar 10, 2019

‘ராணுவத்தைப் பிரசாரத்துக்கு இழுக்காதீர்கள்!’- கட்சிகளிடம் தேர்தல் ஆணையம் கறார்

‘ராணுவப் படைகளை அரசியல் பிரசாரங்களுக்குப் பயன்படுத்தாதீர்’ என்று அரசியல் கட்சிகளை வலியுறுத்தியுள்ளது தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம், நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது

ஹைலைட்ஸ்

  • ராணுவப் படைகள் நடுநிலையாளர்கள், தேர்தல் ஆணையம்
  • அபிநந்தனின் படம், பாஜக போஸ்டரில் பயன்படுத்தப்படதே சர்ச்சையை கிளப்பியது
  • அபிநந்தன் விடுவிப்புக்கு மோடிதான் காரணம் என்று பாஜக கூறியது
New Delhi:

ராணுவம் சம்பந்தமான புகைப்படங்களையோ, போஸ்டர்களையோ பயன்படுத்த வேண்டாம் என்று தேர்தல் ஆணையம், நாட்டில் இருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கேட்டுக் கொண்டுள்ளது

தலைநகர் டெல்லியில் ஓட்டப்பட்டிருந்த ஒரு போஸ்டரில் அமித்ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடியுடன் விமானப்படையைச் சேர்ந்த விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமனுடைய படமும் இருந்ததை அடுத்து, தேர்தல் ஆணையம், ‘ராணுவப் படைகளை அரசியல் பிரசாரங்களுக்குப் பயன்படுத்தாதீர்' என்று அரசியல் கட்சிகளை வலியுறுத்தியுள்ளது. சர்ச்சைக்குரிய போஸ்டருக்குக் கீழ், ‘பிரதமர் மோடிக்குக் கீழ் எதுவும் சாத்தியமே' என எழுதப்பட்டிருந்தது. 

 

பாகிஸ்தானுடன் கடந்த 27 ஆம் தேதி, வான் வழிச் சண்டையில் ஈடுபட்டிருந்த இந்திய போர்ப் படை விமானி, விங் கமாண்டர் அபிநந்தன் அந்த நாட்டின் பிடியில் சிக்கினார். இரண்டு நாட்களுக்குப் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். அவர் விடுதலையானதற்கு பிரதமர் மோடிதான் காரணம் என்று பாஜக-வின் தலைவர்கள் கூறி வருகின்றனர். 

இதையடுத்து தேர்தல் ஆணையம், நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு, ‘நாட்டின் ராணுவப் படைகள்தான், நமது பாதுகாப்புக்குக் காரணம். நமது ஜனநாயகத்தில் அவர்கள் நடுநிலை வகிப்பவர்கள். எனவே, அவர்கள் குறித்து அரசியல் கட்சிகளும் அரசியல் தலைவர்களும் மிகவும் கவனத்துடன் பேச வேண்டும்.

ஆகவே, அனைத்து அரசியல் கட்சிகளும் ராணுவ வீரர்களின் படங்களையோ, ராணுவம் சார்ந்த புகைப்படங்களையோ பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது' என்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளது

.