This Article is From Jan 07, 2019

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தேர்தல் நடத்துவதற்கான சூழல் தற்போது இல்லை என்று கூறி இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்திருக்கிறது.

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

திருவாரூர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டிருந்த இடைத் தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததை தொடர்ந்து அவர் வகித்து வந்த திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பதவி காலியானது. இதையடுத்து அந்த தொகுதிக்கு ஜனவரி 28-ம்தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து முக்கிய கட்சிகள் அனைத்தும், வேட்பாளர்ளை அறிவிக்கும் பணியில் ஈடுபட்டன. முதல்கட்டமாக டிடிவி தினகரனின் அமமுக வேட்பாளராக எஸ். காமராஜ் அறிவிக்கப்பட்டிருந்தார். திமுக தரப்பில் திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

இந்த சூழலில் தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது.

தேர்தல் நடத்துவதற்கான சூழல்நிலை தற்போது இல்லாத காரணத்தால், ஜனவரி 28-ம்தேதி நடக்கவிருந்த திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக கஜா புயல் பாதிப்பு ஏற்பட்டதால் ஏப்ரல் வரையில், தமிழகத்தில் காலியாக இருக்கும் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தக் கூடாது என்று தலைமை செயலாளர் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். 

இதேபோன்று சில தினங்களுக்கு முன்பாக திருவாரூரில் தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டிருந்தது. இந்த சூழலில்தான் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

.