தமிழகத்தில் காலியாக இருக்கும் திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு எப்போது இடைத் தேர்தல் நடக்கும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட நான்கு மாநில சட்டமன்றத் தேர்தல் தேதிகளை இன்று அறிவித்தது தேர்தல் ஆணையம். அப்போதே, தமிழகத்தில் காலியாக இருக்கும் 2 தொகுதிகளில் எப்போது இடைத் தேர்தல் நடத்தப்படும் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இடைத் தேர்தல் தேதியை இப்போது அறிவிப்பதில் சிக்கல் இருப்பதால், தேதி இறுதி செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத், ‘தமிழக அரசின் செயலாளர், எங்களுக்கு தமிழகத்தின் தற்போதைய நிலவரம் குறித்து கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். அதில் அவர், தமிழகத்தில் அடுத்த சில நாட்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்றும், அதனால் தேர்தல் குறித்த அறிவிப்பை தள்ளி வைக்குமாறும் கூறியிருந்தார். அதன்படி, தேர்தல் தேதி அறிவிப்பை ஒத்திவைத்துள்ளோம்’ என்று கூறினார்.
திருப்பரங்குன்ற தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வாக இருந்த ஏ.கே.போஸ் மறைவுக்குப் பின்னர், அந்தத் தொகுதி காலியானது. அதேபோல திமுக தலைவர் கருணாநிதி மறைந்த பின்னர், திருவாரூர் தொகுதி காலியானது. இந்த இரண்டு தொகுதிகளுக்கும் தான், இடைத் தேர்தல் நடத்தப்பட உள்ளன.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)