சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம், கமல்ஹாசன், ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியை அதிகாரபூர்வமாக ஆரம்பித்தார்.
ஹைலைட்ஸ்
- தே.ஆணையம் அறிவிப்பு குறித்து கமல் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்
- வரும் லோக்சபா தேர்தலில் மய்யம், 40 தொகுதிகளிலும் போட்டியிட வாய்ப்பு
- இன்று லோக்சபா தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட உள்ளது
இந்திய தேர்தல் ஆணையம், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும், ‘பேட்டரி டார்ச்' சின்னத்தை ஒதுக்கியுள்ளது.
சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம், கமல்ஹாசன், ‘மக்கள் நீதி மய்யம்' கட்சியை அதிகாரபூர்வமாக ஆரம்பித்தார். அடுத்த சில மாதங்களில் தேர்தல் ஆணையத்தில், முறைப்படி தனது கட்சியைப் பதிவு செய்து கொண்டார்.
கட்சி ஆரம்பித்ததில் இருந்து அவர் தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விவாதங்கள் மற்றும் பொதுக் கூட்டங்களில் பிஸியாக உள்ளார். சில நாட்களுக்கு முன்னர் நடிகை கோவை சரளாவும், மக்கள் நீதி மய்யத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அப்போது பேசிய கமல், ‘எனக்குப் பிறகு எனது கட்சியில் எனது மகளோ, மைத்துனரோ அரசியலுக்கு வர மாட்டார்கள்' என்று பகிரங்கமாக அறிவித்தார். தமிழகத்தை கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் திமுக, அதிமுக கட்சிகளை அவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
இப்படிப்பட்ட சூழலில் சின்னம் ஒதுக்கியது குறித்து கமல், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு “பேட்டரி டார்ச்” சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி. பொருத்தமான சின்னம் தான். எங்கள் கட்சி தமிழ்நாட்டிற்கும் இந்திய அரசியலுக்கும் ஒளி தரும் புது விளக்காய் இன்று முதல் மிளிரும்' என்று பெருமிதத்துடன் பதிவிட்டுள்ளார்.