திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்துவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.
New Delhi: தமிழகத்தில் காலியாக உள்ள 3 சட்டமன்றத் தொகுதிக்கு எப்போது இடைத் தேர்தல் நடத்தப்படும் என்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.
வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி, தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்ல 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் நடக்க உள்ளன. அதே நேரத்தில் இந்த 18 தொகுதி அல்லாமல், காலியாக உள்ள திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்துவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.
3 தொகுதிகள் பற்றி மட்டும் எந்தவிதத் தகவலும் தெரிவிக்கப்படாததை அடுத்து, திமுக சார்பில், விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்ச நீதிமன்றம், ‘தேர்தல் எப்போது நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து நீதிமன்றம் முடிவெடுக்க முடியாது. அது தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டது' என்றது.
தேர்தல் ஆணையம் வாதத்தின் போது, ‘3 தொகுதிகளுக்கு எப்போது தேர்தல் நடத்தப்படும் என்பது குறித்து சீக்கிரமே தெரிவிக்கப்படும்' என்று கூறியது.
முன்னதாக இந்த வழக்கில் வாதாடிய தேர்தல் ஆணையம், ‘குறிப்பிடப்பட்டுள்ள 3 தொகுதிகள் குறித்தான சில வழக்குள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அதன் காரணமாகவே, இடைத் தேர்தல் நடத்த முடியாத சூழல் உள்ளது' என்றது.
ஒட்டப்பிடாரம் தொகுதியின் பிரதிநிதியாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ சுந்தரராஜ் இருந்தார். அரவக்குறிச்சியில் அதிமுக-விலிருந்து திமுக சென்றுள்ள செந்தில் பாலாஜி பிரதிநிதியாக இருந்தார். திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ-வாக இருந்த ஏ.கே.போஸ், சில மாதங்களுக்கு முன்னர் மரணமடைந்தார்.