This Article is From May 25, 2019

''இந்தி பேசும் மாநிலங்களே இந்தியா என்ற காலமெல்லாம் மலையேறிவிட்டது'' : மு.க.ஸ்டாலின்

தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - தலைவர் கலைஞர் ஆகியோரின் அடிச்சுவட்டில், மக்களின் நலன் காக்கும் தி.மு.கழகத்தின் முற்போக்கு வெற்றிப் பயணம் தொடரும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

''இந்தி பேசும் மாநிலங்களே இந்தியா என்ற காலமெல்லாம் மலையேறிவிட்டது'' : மு.க.ஸ்டாலின்

மக்களவை தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றிய நிலையில் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் மு.க.ஸ்டாலின்

Chennai:

இந்தி பேசும் மாநிலங்களே இந்தியா என்ற காலமெல்லாம் மலையேறி விட்டது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் தேனி தொகுதியை தவிர்த்து மற்ற அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. 

இந்த வெற்றியைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது- 

நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் மக்கள் நலன் காக்கும் உரிமைக்குரலாக தி.மு.கழகம் ஓங்கி ஒலிக்கும். மக்களுக்கெதிரான பிளவு சக்திகள் தமிழ்நாட்டில் தலையெடுக்காதவாறு விழிப்புடன் காவல்காக்கவேண்டிய கடமையும் பொறுப்பும் கொண்ட கொள்கைத் தோழமையுடன் ஒருங்கிணைந்து செயல்படுவோம். 

மாநில நலன்களும் உரிமைகளும் பறிபோகாமல் தடுக்கவும் - பறிபோனவற்றை மீட்டெடுக்கவும்-ஜனநாயகம் காக்கவும் அமைதியான அறவழியிலான போராட்டம் அயராமல் தொடரும். மதநல்லிணக்க சக்திகளை ஒருங்கிணைக்கும் ‘தமிழ்நாடு வியூகத்தை' பிற மாநிலங்களிலும் செயல்படுத்திட தி.மு.கழகம் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

திட்டமிட்டு தி.மு.க.வை அழிக்க நினைத்த திரிபுவாத சக்திகளுக்கு ஜனநாயகரீதியாக கொடுக்கப்பட்ட தக்க பதிலடிதான் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் களங்களில் நமக்கு மக்கள் அளித்துள்ள இந்த அருமையான வெற்றி.

தமிழ்நாட்டு மக்களின் வற்றாத அன்பும் வாஞ்சைமிகு ஆதரவுமே வாக்குகளாக மாறி இந்த வெற்றியைத் தந்துள்ளது. மகத்தான இந்த வெற்றிக்கு நிச்சயமாக நான் மட்டுமே சொந்தம் கொண்டாட முடியாது. நம்மை ஆளாக்கிய தலைவர் கலைஞர் அவர்கள் வகுத்தளித்த வழியில், தேர்தல் களப் பணியில் தேனீக்களை மிஞ்சும் சுறுசுறுப்புடன் ஓயாமல் உழைத்த கழகத்தின் அனைத்து நிர்வாகிகளும் தொண்டர்களாம் அன்பு உடன்பிறப்புகளும் இல்லாமல், இந்த வெற்றி இந்த அளவுக்குச் சாத்தியமாகியிருக்காது. 

ஆட்சியாளர்களின் அதிகார வரம்புமீறல்களை எதிர்கொண்டு, சரியான - தெளிவான - உறுதியான வியூகத்தை வகுத்து, அதனைக் கிஞ்சிற்றும் பிசகாமல் களத்தில் செயல்படுத்திய கழகத்தினரும் தோழமைக் கட்சியினரும் இந்த வெற்றியின் முக்கிய பங்குதாரர்கள்.

இனி வரும் காலம், மாநிலங்களை மையப்படுத்தும் ஆக்கபூர்வ அரசியலுக்கான காலம். மத்தியில் எந்த அரசு அமைந்தாலும் எந்தவொரு மாநிலத்தையும் அலட்சியம் செய்துவிட முடியாது. அனைத்து தேசிய இனங்களையும் ஆதரித்து அரவணைத்துச் செல்ல வேண்டிய நேரம் இது.இந்தி பேசும் மாநிலங்களே இந்தியா என்ற காலமெல்லாம் மலையேறிவிட்டது. 

பேரறிஞர் அண்ணா அவர்களும், தலைவர் கலைஞர் அவர்களும் கண்ட இனம்-மொழிக்கான கனவு நனவாகும் காலம் நெருங்கி வருகிறது. தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - தலைவர் கலைஞர் ஆகியோரின் அடிச்சுவட்டில், மக்களின் நலன் காக்கும் தி.மு.கழகத்தின் முற்போக்கு வெற்றிப் பயணம் தொடரும்.
இவ்வாறு ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். 

.