தேஜகூ-2 அமைப்பது குறித்தான செயல்திட்டத்தில் மோடியும், அமித்ஷாவும் கையெழுத்திட்டனர்.
ஹைலைட்ஸ்
- அமித்ஷா அளித்த விருந்தில் 36 கூட்டணி கட்சிகள் பங்கேற்றுள்ளன.
- தேசிய பாதுகாப்பு, தேசிய வளர்ச்சி ஆகியவற்றைச் உறுதிப்படுத்த தீர்மானம்.
- பாஜக பெரும்பான்மையை பெறும் என கருத்துக்கணிப்புகள் தகவல்.
New Delhi: தேசிய ஜனநாயக கூட்டணி-2 அமைப்பது குறித்தான தீர்மான செயல்திட்டத்தில் மோடியும், அமித்ஷாவும் கையெழுத்திட்டனர்.
வாக்கு எணிக்கைக்கு 2 நாட்கள் முன்னதாக, பாஜக தலைவர் அமித்ஷா டெல்லி அசோகா ஹோட்டலில் அளித்த விருந்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர். எதிர்பார்க்காத அளவிலாக அமைந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை தொடர்ந்து, கூட்டத்தில் முக்கிய செயல்திட்டமாக தேசிய பாதுகாப்பு, தேசியவாதம், வளர்ச்சி ஆகியவாற்றை உறுதிப்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டதிற்கு பின்னர் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அளித்த பேட்டியில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் பங்கேற்றதாகவும், கூட்டத்தில் கலந்துக்கொள்ளாத மேலும் 3 கூட்டணி கட்சிகளும், எங்களுக்கு கடிதம் வாயிலாக தங்களது ஆதரவை தெரித்துள்ளனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசாங்கம் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்தது, அடுத்த ஐந்து ஆண்டுகளில், நாம் முன்னேற்றத்தின் வேகத்தை அதிகரிப்பதோடு மக்களின் மற்ற தேவைகளை பூர்த்தி செய்வோம் என்றார்.
மேலும், அவர் கூறும்போது, 2022க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் வகையில், செயல்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இது பயங்கரவாத எதிர்ப்பு, பணமோசடி மற்றும் பூவி வெப்பமயமாதல் ஆகிய பகுதிகளில் இந்தியா எப்படி பாதிப்படைகிறது என்பதையும் இந்த செயல்திட்டம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளாக நாட்டுக்கு தங்கள் சேவையை வழங்கிய மத்திய அமைச்சர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டமாக இந்த கூட்டம் நடத்தப்படுகிறது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து தலைவர்களும் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும் என்றும், நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆவார் என்று உறுதியுடன் தெரிவித்தனர்.
பின்னர் நரேந்திர மோடியும், அமித்ஷாவும் ஐக்கிய ஜனதாதள கட்சித் தலைவர் நிதிஷ்குமார் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினர். வெளியாக உள்ள தேர்தல் முடிவுகள் குறித்து அவர்கள் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அமித்ஷா தனது ட்விட்டரில், கடந்த 5 ஆண்டுகளாக மேற்கொண்ட கடுமையான பணிகள் மற்றும் குறிப்பிடத்தக்க சாதனைகளுக்காக மோடி அரசுக்கு நான் வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். பிரதமர் மோடி தலைமையில் புதிய இந்தியாவை நோக்கி பயணித்த இந்த தருணங்களை நாம் எப்போதும் நினைவில் கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டம் மற்றும் விருந்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட சில அமைச்சர்கள், பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக்கட்சி ஏ.சி.சண்முகம், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி உள்ளிட்ட தமிழக தலைவர்களும் கலந்துகொண்டனர்.