பாஜக உயர் மட்ட தலைவர்கள் தீவிர ஆலோசனையில் உள்ளனர்.
New Delhi: அரியானா சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில், சுயேச்சை எம்எல்ஏக்கள் 6 பேர் ஆதரவு அளிக்க முன்வந்துள்ளனர். இதனால் விரைவில் பாஜக தலைமையிலான அரசு அரியானாவில் பொறுப்பேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தம் 90 தொகுதிகளைக் கொண்ட அரியானா சட்டமன்ற தேர்தலுக்கு கடந்த 21-ம்தேதி தேர்தல் நடத்தப்பட்டு நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அரியானாவில் ஆட்சியமைக்க ஒரு கட்சிக்கு குறைந்தது 46 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. தேர்தலில் பாஜக 40 தொகுதிகளிலும், காங்கிரஸ் 31 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.
துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சியான ஜே.ஜே.பி. 10 இடங்களில் வெற்றி பெற்றது. இதனால் எந்தவொரு தனிக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இந்த நிலையில், பாஜகவுக்கு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் ஆதரவு அளிக்க முன்வந்துள்ளனர். இதனால் அரியானாவில் பாஜக அரசு விரைவில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக டெல்லிக்கு சென்றுள்ள முதல்வர் மனோகர் லால் கட்டார், கட்சியின் உயர்மட்ட தலைவர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். மகாராஷ்டிரா மற்றும் அரியானா சட்டமன்ற தொகுதி முடிவுகள் குறித்து பாஜக தலைவர் ஜே.பி. நட்டா உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் நேற்று மாலையில் ஆலோசனை நடத்த தொடங்கினர். இந்த ஆலோசனை இன்று காலை வரை நீடித்தது.
மாநிலத்தில் ஜே.ஜே.பி. கட்சி கிங்மேக்கராக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஜக பெரும்பான்மை பெறுவதற்கு 6 எம்எல்ஏக்கள் ஆதரவு மட்டுமே தேவை. இதனால் ஜேஜேபி கட்சியை யாரும் கண்டுகொள்ளவில்லை.
முதல்வர் பதவி கொடுத்தால் காங்கிரசுக்கு ஜே.ஜே.பி. தலைவர் துஷ்யத் சவுதாலா ஆதரவு அளிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.