Election Results 2019: அரியானாவில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பாஜக, 40 இடங்களில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
New Delhi: மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றன. மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணி மீண்டும் ஆட்சி அரியணையில் அமரப் போகிறது. 2014 ஆம் ஆண்டு, இந்தக் கூட்டணிக்கு கிடைத்த வெற்றியை ஒப்பிடும்போது, தற்போது கிடைக்கப் போகும் வெற்றி சிறியதாகவே இருக்கும். அதே நேரத்தில் அரியானாவில், பாஜக தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அந்த மாநிலத்தில் பாஜக-வுக்கு ஆட்சியமைக்கு அளவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அரியானாவில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பாஜக, 40 இடங்களில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அம்மாநிலத்தின் முதல்வர் மனோகர்லால் கட்டார், மீண்டும் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பான்மையைப் பெற 46 இடங்கள் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அரியானாவில் காங்கிரஸ், 30 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஜட் சமூக தலைவர் துஷ்யந்த் சவுத்தாலாவின் கட்சி, 10 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அவர்தான் தற்போது அரியானாவின் ‘கிங்-மேக்கராக' வலம் வருவார் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இரு மாநில தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, “எங்களை ஆசிர்வதித்தமைக்கு அரியானா மக்களுக்கு நன்றி. மாநிலத்தின் முன்னேற்றத்துக்காக தொடர்ந்து உத்வேகத்தோடு உழைப்போம். நம் வளர்ச்சி பிரசாரத்தை அரியானா மக்களிடம் எடுத்துச் சென்ற தொண்டர்களுக்கு நன்றி,” என்று ட்வீட்டினார்.
இன்னொரு ட்வீட்டில் பிரதமர், “மகாராஷ்டிரா மக்கள், தேஜகூவுக்கு பெரும் வெற்றியைத் தந்துள்ளனர். மீண்டும் மக்களின் ஆதரவு கிடைத்தது சிறப்பான ஒன்று. மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்கான எங்கள் சேவை தொடரும். பாஜக, சிவசேனா மற்றும் தேஜகூ-வின் தொண்டர்களுக்கு சல்யூட்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் பாஜக-வுக்கு 100 இடங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிவசேனாவுக்கு 60 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் தேஜகூ கூட்டணி, சுமார் 150 இடங்களை கைப்பற்றலாம். மொத்தம் இருக்கும் 288 தொகுதிகளில் 150-ஐ கைப்பற்றினால் சுலபமாக ஆட்சியமைத்துவிடலாம். ஆனால், பாஜக, தான் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கு என்று எதிர்பார்த்தது. அந்த எண்ணம் ஈடேறவில்லை.