Election Results: “Congress தொண்டர்கள், BJP-வை தேர்தலில் தோற்கடிக்கலாம் என்று நம்ப வேண்டும்"
New Delhi: ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் (INX Media Case) முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் (P Chidambaram), அமலாக்கத் துறையின் (ED) பிடியில் சிறையில் இருக்கிறார். இந்நிலையில் அவர், மகாராஷ்டிரா (Maharashtra) மற்றும் அரியானா (Haryana) மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து கேலி செய்யும் வகையில் கருத்து கூறியுள்ளார். இது குறித்து சிதம்பரம் பேசும் ஒரு வீடியோவும் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றன. மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணி மீண்டும் ஆட்சி அரியணையில் அமரப் போகிறது. 2014 ஆம் ஆண்டு, இந்தக் கூட்டணிக்கு கிடைத்த வெற்றியை ஒப்பிடும்போது, தற்போது கிடைக்கப் போகும் வெற்றி சிறியதாகவே இருக்கும். மகாராஷ்டிராவில் மொத்தம் இருக்கும் 288 இடங்களில், 161 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளன. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி, 98 இடங்களைப் பிடித்துள்ளது.
அரியானா சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில், சுயேச்சை எம்எல்ஏக்கள் 6 பேர் ஆதரவு அளிக்க முன்வந்துள்ளனர். இதனால் விரைவில் பாஜக தலைமையிலான அரசு அரியானாவில் பொறுப்பேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தம் 90 தொகுதிகளைக் கொண்ட அரியானா சட்டமன்ற தேர்தலுக்கு கடந்த 21-ம்தேதி தேர்தல் நடத்தப்பட்டு நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அரியானாவில் ஆட்சியமைக்க ஒரு கட்சிக்கு குறைந்தது 46 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. தேர்தலில் பாஜக 40 தொகுதிகளிலும், காங்கிரஸ் 31 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.
துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சியான ஜே.ஜே.பி. 10 இடங்களில் வெற்றி பெற்றது. இதனால் எந்தவொரு தனிக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இரண்டு தேர்தல்களிலும் பாஜக, தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும் என்று கருத்துக் கணிப்புகள் சொல்லி வந்த நிலையில், பாஜக-வுக்கு மிகப் பெரும் வெற்றி கிடைக்காதது பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சிதம்பரம், தேர்தல் முடிவுகள் குறித்து கூறும்போது, “அமைதியான நாட்டுப்பற்று என்பது பலவந்தமான தேசப்பற்றைத் தோற்கடிக்கும்,” என்று பன்ச் கொடுத்து பேசியுள்ளார். இது குறித்தான ஒரு வீடியோவும் வெளியாகி வைரலாகி வருகிறது.
சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “காங்கிரஸ் தொண்டர்கள், பாஜக-வை தேர்தலில் தோற்கடிக்கலாம் என்று நம்ப வேண்டும். அமைதியான நாட்டுப்பற்று என்பது பலவந்தமான தேசப்பற்றைத் தோற்கடிக்கும். பயத்தைப் புறந்தள்ளினால் அதிசயங்கள் நடக்கும்,” என்று தெரிவித்துள்ளார்.