அரியானா, மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றும் என கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் 2 தொகுதிகளின் இடைத்தேர்தல், அரியானா, மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.
நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த வசந்த குமார், கன்னியாகுமரியில் போட்டியிட்டு எம்.பி. ஆனதை தொடர்ந்து, நாங்குநேரியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. நாங்குநேரியில் அதிமுக சார்பாக ரெட்டியார்பட்டி நாராயணன், திமுக - காங்கிரஸ் கூட்டணி தரப்பில் ரூபி மனோகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜ்நாராயணன் உள்பட மொத்தம் 23 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக உறுப்பினர் ராதாமணி உடல்நலக்குறைவால் கடந்த ஜூன் 14-ம்தேதி மறைந்தார். இதையடுத்து அங்கு இடைத்தர்தல் நடத்தப்பட்டுள்ளது.விக்ரவாண்டி தொகுதியில் அதிமுக சார்பாக முத்தமிழ்ச்செல்வன், திமுக தரப்பில் புகழேந்தி, நாம் தமிழர் கட்சி சார்பாக கந்தசாமி உள்பட 12 பேர் போட்டியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் நாங்குநேரி, விக்ரவாண்டி தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும்பணி காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது.
மகாராஷ்டிரா, அரியானா சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் மொத்தம் 51 சட்டமன்ற தொகுதிகள், 2 மக்களவை தொகுதிகளில் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 17 மாநிலங்களில் இந்த இடைத் தேர்தல் நடைபெற்றது. இடைத்தேர்தல் நடைபெறும் 51 தொகுதிகளில் 30 தொகுதிகள் பாஜக வசமும், 11 தொகுதிகள் காங்கிரசிடமும், மற்ற தொகுதிகள் மாநில கட்சிகளிடம் உள்ளன.
அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 11 தொகுதிகள், குஜராத்தில் 6, கேரளா மற்றும் பீகாரில் தலா 5, அசாம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் தலா 4, சிக்கிம் மற்றும் இமாசல பிரதேசத்தில் தலா 3, தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தானில் தலா 2, அருணாசல பிரதேசம், மத்திய பிரதேசம், ஒடிசா, சட்டீஸ்கர்,புதுச்சேரி, மேகாலயா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதியிலும் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டன.
இதனைத் தவிர்த்து மகாராஷ்டிராவின் சதாரா மற்றும் பீகாரின் சமஸ்திபூர் மக்களவை தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.