அகில இந்திய அளவில் பாஜக 300 இடங்களுக்கு மேல் முன்னிலை வகித்து வருகிறது
2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவாக வந்து கொண்டிருக்கும் நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.
இது குறித்து தமிழக செய்தி மக்கள் தொடர்புத் துறை வெளியிட்ட அறிக்கையில், “முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பொதுத் தேர்தலில் நீங்கள் பெற்றுள்ள மாபெரும் வெற்றிக்கு வாழ்த்துகள். உங்களை இந்த நாட்டு மக்கள் மீண்டும் தேர்வு செய்துள்ளார்கள். உங்கள் தலைமையில் இயங்கப் போகும் இந்திய அரசுக்கு வாழ்த்துகள்” என்று கடிதம் எழுதியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 19 தொகுதிகளில் போட்டியிட்டது. அதன் கூட்டணிக் கட்சிகள் 19 தொகுதிகளில் போட்டியிட்டன. அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக கூட்டணி 36 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. அகில இந்திய அளவில் பாஜக 300 இடங்களுக்கு மேல் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.